
தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையில் உள்ள வடவாறு படித்துறை கடந்த எட்டு வருடமாக சிதைந்து கிடக்கிறது. அதனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்கும் போது,
” அட போம்மா… இத பத்தி நிறைய பேரு கேட்டுட்டாங்க. ஆனா யாரும் இந்த படித்துறைய சரி செய்ய வரல. இந்த வடவாறு ஆத்துப்பால சரிவுல 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழுறோம். நாங்க ஒன்னும் 10 வருசம் 20 வருசமா இங்க வாழல. காலங்காலமா தலைமுறை தலைமுறையா இங்கதான் வாழ்ந்துட்ட இருக்கோம்.
எட்டு வருஷத்துக்கு மேல ஆகிட்டு. ஆனா இந்த படித்துறையை சரி செய்ய யாருமே முன் வரல. கரந்தை புதுப்பாலம் கட்டும்போது சரி செய்றோம்னு சொன்னாங்க. பாலம் கட்டியே 2 வருஷம் ஆச்சு. ஆனா இன்னும் இந்த படித்துறைய சரி செய்யல. நாங்களும் கொடுக்காத மனு இல்ல.. பேசாத ஆள் இல்ல.. இதக்கேட்டு கேட்டு சலிச்சு போச்சு..
குழந்தைகளுக்கும் ஆபத்து:
இந்த படிக்கட்டுகள் சரி இல்லாம இருப்பதால் எங்க குழந்தைகளை தனியா விடவே பயமா இருக்கு. எங்களுக்கு இந்த ஆறு தான் எல்லாமே. நாங்க புழங்கறதுக்கு இந்த ஆற்றை தான் பயன்படுத்துவோம். இங்க 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்காங்க. பெரியவங்க, வயதானவர்கள் எல்லாமே இந்த படிக்கட்ட தாண்டி தான் போகணும். இப்படி சிதைந்து பாசி பிடித்த படிக்கட்டு வழியாக குழந்தைகள்ல இருந்து பெரியவர்கள் வரைக்கும் ஏன் இளைஞர்கள் கூட போக பயப்படுறாங்க. இப்படி சிதைந்த நிலையில் கிடக்கும் படிக்கட்டுல வழுக்கி விழுந்தால் எங்க உயிருக்கு ஆபத்து தான் ஏற்படும்.

தொற்று ஏற்படும் அபாயம் :
அதுமட்டும் இல்லாம இந்த படிக்கட்டு மட்டும் பிரச்னை இல்லை. பின்னாடி வர கழிவு நீரும் ரொம்ப சிரமத்தை ஏற்படுத்துது. தஞ்சாவூர் மேலவீதி, கீழவாசல்(மீன் மார்க்கெட் கழிவு) அகழி நீர் கழிவு, சாக்கடை கழிவுனு எல்லா கழிவுமே இந்த வடவாறுல தான் வந்து கலக்குது. நிமிஷத்துக்கு நிமிஷம் துர்நாற்றமும் வீசுது. எங்க புள்ள குட்டிங்க மட்டும் இல்லாம பாலத்துக்கு அடுத்து இருக்கிற பள்ளி, கல்லூரியில் உள்ள பிள்ளைகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்துற நிலையில் இருக்கிறது. இந்த கழிவு நீரால் கொசு தொல்லையும், மழை பெய்தால் வருகின்ற துர்நாற்றமும் தொற்று நோயினை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
அதிகாரிகள் சொல்வதென்ன?
இதைக் குறித்து நாங்களும் நிறைய பேர் கிட்ட சொன்னோம்… கரந்தை பாலம் கட்டியதுமே உடனே இந்த படித்துறையை சரி செய்யுறோம் என கூறினார்கள். தளம் கட்டி முடிச்சு ரெண்டு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு.. படித்துறை மட்டும் அப்படியே தான் இருக்கு. இதை எப்பதான் சரி செய்வார்கள் என்று நாங்களும் எதிர்பார்த்துதான் இருக்கோம்” என அப்பகுதி மக்கள் கூறினர்.