
இங்கிலாந்தின் முக்கிய நகரில் சுற்றித் திரிந்த கருப்பு நிற அன்னப்பறவையை அந்த நகரத்தை விட்டு வெளியேற்ற உள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்.
இங்கிலாந்தின் ஸ்ட்ராட்ஃபோர்ட்-அபான்-ஏவன் நகரில் ஒரு கருப்பு நிற அன்னப்பறவை சுற்றி வந்திருக்கிறது, இது அங்கு இருக்கும் மற்ற பறவைகளைத் தாக்கி வருவதை அடுத்து அந்நகரை விட்டு அந்தப் பறவை வெளியேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
”ரெஜி” என்று பெயரிடப்பட்ட இந்தப் பறவை அதன் வன்முறை செயல்களால் ”மிஸ்டர் டெர்மினேட்டர்” என்ற பட்டப் பெயரைப் பெற்றிருக்கிறது.
கடந்த 9 மாதங்களாக இந்த ரெஜி மற்ற பறவைகளைத் தாக்கி நீரில் மூழ்கடிக்க முயற்சி செய்வது எனப் பல்வேறு வன்முறை விஷயங்களில் ஈடுபட்டு வந்துள்ளது.
ரெஜி ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பறவை, கடந்த ஆண்டுதான் அந்த நகரத்திற்கு வந்துள்ளது. இதன் தனித்துவமான கருப்பு நிறம் காரணமாக உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் இடையே இது அதிகம் கவரப்பட்டது.
ஆரம்பத்தில் அனைவரும் விரும்பினாலும் நாளடைவில் இந்தப் பறவை பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறது. பறவைக் குஞ்சுகளைத் தாக்குவது, மற்ற பறவைகளை விரட்டி அடிப்பது எனப் பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டதையடுத்து இந்தப் பறவையை இந்த நகரத்தை விட்டு வெளியேற்ற முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பான துறை அதிகாரிகள் அந்தப் பறவையைப் பிடித்து தற்போது தற்காலிகமாக உள்ளூர் பூங்காவில் வைத்துள்ளனர். வேறு இடத்துக்கு (Dawlish Waterfowl Centre) மாற்ற உள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.