மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் உயிரிழந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2 வயதுக்கு உட்பட்ட இக்குழந்தைகள் இருமலுக்கு மருந்து குடித்த சில நாட்களில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இறப்பது தெரிய வந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் மட்டும் 9 குழந்தைகள் இதே பிரச்னையால் உயிரிழந்துள்ளனர். இது தவிர மேலும் 5 குழந்தைகள் அண்டை மாநிலமான மகாராஷ்டிராவின் நாக்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் உயிரிழப்பு நடந்த பகுதியில் விற்பனை செய்யப்படும் இருமல் மருந்தின் 19 மாதிரிகள் எடுத்துச்செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் சிறுநீரக பாதிப்புக்குக் காரணமான diethylene glycol மற்றும் ethylene glycol போன்ற நச்சுப்பொருட்கள் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
தற்போது 9 மாதிரிகளின் முடிவுகள் மட்டுமே வந்திருக்கின்றன. 10 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு இருமல் மருந்துகளுக்கு மாநில அரசு தடை விதித்து இருக்கிறது.
ராஜஸ்தானிலும் அரசின் இலவச மருத்துவ முகாமில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்த 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இறந்த குழந்தைகள் அனைவருமே இருமல் மருந்து குடித்ததாக அவர்களது பெற்றோர் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானிலும் சர்ச்சைக்குரிய மருந்துகளின் மாதிரிகள் எடுத்துச்செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் எந்தவித நச்சுத்தன்மையும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே இருமல் மருந்தில் சர்ச்சை ஏற்பட்டு இருப்பதால் தமிழ்நாட்டில் Coldrif என்ற இருமல் மருந்துக்கு மாநில அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி மருந்து மாதிரிகளை எடுத்துச்சென்றுள்ளனர்.














































































































































































































































































































































































































































































































































































































































































































































































