
மதுரை மாவட்டம் திருமால் கிராமத்திலுள்ள கல்குவாரியை அகற்றக்கோரி அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ரேசன் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தி கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமங்கலம் தொகுதியிலுள்ள திருமால் கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது விவசாய நிலங்களை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இக்கிராமத்தில் மக்களின் எதிர்ப்பை மீறி கிரஷர் கல்குவாரி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அது மட்டுமின்றி நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கிராவல் மண் கடத்தப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
விதிமுறை மீறி கல்குவாரி செயல்படுவதால் கிராமத்தில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும், கல்குவாரியிலிருந்து வெளியேறும் மண் துகள் மற்றும் தூசுகளால் குழந்தைகள், முதியோர்களுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதாகவும், அதனால் தங்கள் உயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் கல்குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கடந்த சில நாட்களாக கிராமத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினரும் துணை எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.பி.உதயகுமார், ‘கல்குவாரியை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் மூலம் வலியுறுத்தியவர், கிராம மக்களின் போராட்டத்திலும் பங்கேற்றார்.
இந்த நிலையில் திருமால் கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ரேஷன் அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை மதுரையில் நேற்று நடத்தினார்கள்.
இந்தப் போராட்டத்துக்கு ஆர்.பி.உதயகுமார் தலைமையில் வாகனங்களில் வந்தவர்களை கலெக்டர் அலுவலக சாலையில் காவல்துறையினர் அனுமதிக்காத நிலையில், திருவள்ளுவர் சிலை அருகிலிருந்து கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர்.
கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் அனுமதிக்க காவல்துறையினர் மறுத்ததால் கொளுத்தும் வெயிலில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்.பி.உதயகுமாருக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலரும் காவல்துறையினரும் ஆர்.பி உதயகுமாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்பு அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்திற்குக் கொண்டு சென்றனர். போராட்டத்தின்போது நான்கு பெண்கள் மயக்கமடைந்ததாகச் சொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.