
உடலில் நோய் வராமல் இருக்கவும், உடல் ஆரோக்கியமாக இருக்கவும்தான் உடற்பயிற்சி செய்கின்றோம்.
கூடவே, உடல் எடையைக் குறைக்கவும் உடற்பயிற்சி செய்கிறோம். அப்படிப்பட்ட உடற்பயிற்சியைச் சரியான முறையில் அல்லது சூழலில் செய்யாவிட்டாலோ அல்லது அளவுக்கதிகமாகச் செய்துவிட்டாலோ பிரச்னைகள் வரலாம் என்று நாம் அறிந்திருக்க மாட்டோம். அது பற்றிக் கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர் ராஜேஷ்.
”உடலில் ஏற்படும் அழுத்தங்களில் மிகவும் அதிகமானது உடற்பயிற்சியால் ஏற்படும் அழுத்தமே. உடற்பயிற்சி செய்வதற்கான சில வழிமுறைகள் உள்ளன. அது நம் உடலின் ஊட்டச்சத்து அளவைப் பொருத்தது.
1. உங்களுக்கு அடினோசின் ட்ரைபாஸ்பேட் (Adenosine triphosphate) பற்றித் தெரியுமா? நம் உடலில் அனைத்து செயல்பாட்டுக்கும் ஆற்றலைத் தருகிற மூலக்கூறு இதுதான். இது நம் உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.
இந்தச் சேமிப்பு ஆற்றலாக மாறும்போது இரண்டு நொடிகள் மட்டுமே இருக்கும். உதாரணத்துக்கு, உங்களுடைய ஒரு கையை உயர்த்துவதற்கு இது உதவும்.
2. அடுத்து, பாஸ்போக்ரியாடின் (phosphocreatine). இது விரைவாக ஆற்றலை உருவாக்க உதவும் ஒரு மூலக்கூறு ஆகும். இது நமக்கு தரும் ஆற்றலை 6 முதல் 7 நொடிகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
3. இந்த இரண்டையும் தவிர்த்து, நம் தசைகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிற குளுக்கோஸும் நமக்கு ஆற்றலை அளிக்கும். இந்த ஆற்றலை ஒன்று முதல் இரண்டு மணி நேரம் பயன்படுத்தலாம்.

இனி உடற்பயிற்சிக்கு வருவோம். உடற்பயிற்சி என்பதே நம் உடலில் உள்ள ஆற்றலைப் பயன்படுத்துவதுதான். நம் உடலில் உள்ள ஆற்றல்களை மற்ற வேலைகள் செய்வதற்குப் பயன்படுத்திய பின்னும், உடற்பயிற்சி செய்தால் உடலில் உள்ள கொழுப்புகள் எரிந்து அதிலிருந்து ஆற்றல் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படும்.
ஒரு சாதாரண மனிதனால் உடற்பயிற்சியை அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை மட்டும்தான் செய்ய இயலும். அதுவரை மட்டுமே குளுக்கோஸ் தரும் ஆற்றல் கைகொடுக்கும். அதற்குப் பிறகு உடலின் கொழுப்பைப் பயன்படுத்தும். ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும் உடற்பயிற்சி செய்தால் உடல் சோர்வடையும்.
நாம் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் ஆற்றல் பயன்படுவதால், உடலில் எப்போதும் ஒரு வகையான வெப்பம் உருவாகிக்கொண்டே இருக்கும். அதை நம்முடைய உடலே சமநிலையில் வைத்துக்கொள்ளும். ஒருவேளை உடலில் வெப்பம் அதிகமாக உருவாகும்போதோ அல்லது சுற்றுப்புறத்தில் வெப்பம் அதிகரிக்கும்போதோ, நம் உடல் தன் வெப்பத்தைத் தணிக்க வேறொரு வழியை கையாளும். அதுதான் வியர்வை.

இந்த வியர்வை ஆவியானால்தான் உடலுக்குக் குளிர்ச்சி ஏற்படும். ஒருவேளை உடலில் அதிகளவு வெப்பம் உற்பத்தியாகி, உடலின் குளிர்ச்சி செயல்முறையைத் தாண்டிவிட்டால், வெப்ப வாதம் (Heat Stroke) என்கிற பிரச்னை வரும். வெப்ப வாதம் வந்தால் வாந்தி, குழப்பம், வலிப்பு போன்ற அறிகுறிகள் வரும் வாய்ப்பு உண்டு. உடனடியாகச் சிகிச்சையளிப்பதும் அவசியம்.
சிலருக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே இதயத்தின் ஒரு பகுதியில் மட்டும் தசை அதிகம் வளர்ந்து இருக்கும். இந்தப் பிரச்னையைப் பொறுத்தவரை எந்த அறிகுறியும் தெரியாது. அதிகமாக உடற்பயிற்சி செய்யும்போது இதயத்தின் தாளம் (heart rhythm) மாறி, அரித்மியா (Arrhythmia) என்கிற பிரச்னை ஏற்படும். உடனடியாகச் சிகிச்சை அளிக்கவில்லை என்றால், உயிருக்கே ஆபத்தாக அமையலாம்.

இது மட்டுமின்றி, உடல் எடையை அதிகரிக்கவும் சிலர் உடற்பயிற்சி செய்வார்கள். உடல் எடை ஏறுவதென்பது உடலிலுள்ள தசைகளின் வளர்ச்சிதானே… அளவிற்கு அதிகமாக தசை வளர்ச்சி இருந்தாலும் ஆபத்துதான்.
அதிக தசை வளர்ச்சியினால் உடல் உறுப்புகளுக்கு ரத்தமும் அதிகம் தேவைப்படும். இதனால் இதயத்தின் வேலை அதிகமாகும். விளைவு ரத்த அழுத்தம் ஏற்படும்.
உடற்பயிற்சி நல்லதுதான். அதே நேரம், அதிக வெப்பம் இருக்கும் நேரங்களில் உடற்பயிற்சி செய்யாதீர்கள். காலை மற்றும் மாலை நேரங்களில் உடற்பயிற்சி செய்வது நல்லது. உடற்பயிற்சி செய்ய, உடல் எடை குறைக்க என்று எது செய்தாலும், சரியான அளவு உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.
தவிர, முதன்முதலில் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போதே, அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று துவங்கக்கூடாது. முதலில் பத்து நிமிடம், பிறகு 15 நிமிடம் என்று சிறிது சிறிதாகவே உடற்பயிற்சி நேரத்தை அதிகரிக்க வேண்டும்.
கடினமான உடற்பயிற்சிகள் செய்வது, அதிக எடை தூக்குவது போன்றவற்றில் ஒரு சில தசைகள் மட்டுமே செயல்படும். இவற்றைக் காட்டிலும் சுறுசுறுப்பான நடைப்பயிற்சி சிறந்த உடற்பயிற்சியாக இருக்கும். இதில் அனைத்து தசைகளும் செயல்படும். மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் சுறுசுறுப்பான நடைப்பயிற்சியையே” என்கிறார் டாக்டர் ராஜேஷ்.