• October 3, 2025
  • NewsEditor
  • 0

ராமநாதபுரத்தில் நீண்ட காலமாக ரயில் நிலையம் எதிரே நகராட்சிக்குச் சொந்தமான அண்ணா பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. மாவட்டம் பிரிக்கப்பட்டபோது போதிய வசதிகளுடன் வாராந்திர சந்தை பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

இதையடுத்து பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் என்ற பெயர்களில் இவை பொது மக்களால் அழைக்கப்பட்டு வந்தது.

திட்டங்களை துவக்கிய முதல்வர் ஸ்டாலின்

இந்நிலையில் போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் இட நெருக்கடியில் திணறிய புதிய பேருந்து நிலையம் ரூ. 20 கோடி செலவில் விரிவுபடுத்த அரசு உத்தரவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த விரிவாக்கப் பணிகள் முடிவடைந்த நிலையில், இந்தப் புதிய பேருந்து நிலையத்திற்கு மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், இமானுவேல் சேகரன் உள்ளிட்ட பல தலைவர்களின் பெயரைச் சூட்ட வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த ராமநாதபுரம் நகர் மன்ற கூட்டத்தில், புதிய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் மு.கருணாநிதி பெயர் சூட்டத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அ.தி.மு.கவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்களும் பெரும்பான்மை இல்லாததால் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

விழாவில் பங்கேற்ற பெண்கள்
விழாவில் பங்கேற்ற பெண்கள்

இந்நிலையில் இன்று காலை ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் ‘முத்தமிழறிஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு நினைவு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்’ எனப் பெயர் சூட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார்.

இந்தப் பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் வைத்தது முன் கூட்டியே வெளியே தெரிந்தால் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாவின்போது எதிர்ப்பு எழும் என நகராட்சி தரப்பில் கருதினர்.

இதனால் பேருந்து நிலையத்தின் வடக்கு நுழைவு வாயில் பகுதியில் விழா நாளுக்கு முந்தைய இரவில் அவசர அவசரமாகப் பெயரை எழுதியுள்ளனர். மற்றொரு நுழைவு வாயிலான மேற்கு பகுதியில் அதையும் எழுதவில்லை.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்திற்கு கருணாநிதியின் பெயர் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன், ”சேதுபதி மன்னர்கள் அரசுக்கு வழங்கிய இடத்தில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையில் புதிய பேருந்து நிலையத்திற்கு சேதுபதி மன்னரது பெயரைச் சூட்டியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் கருணாநிதியின் பெயரைச் சூட்டியுள்ளனர்.

இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் போது பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றுவோம்” எனக் கூறியுள்ளார்.

இதே போல் புதிய பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்கப்பட்டதற்கு தென் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தப் பெயர் பிரச்னை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *