
சமீபத்தில் ஸ்டார்லிங்க், டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க், வான்வெளி ராணுவத்தில் ட்ரோன்களைப் பயன்படுத்துவது குறித்துப் பேசியிருந்தார்.
மேலும், ராணுவ பைலட்டுகள் ஓட்டும் போர் விமானத்தை விடவும், ட்ரோன்கள் சிறப்பாகச் செயல்படும், அதுதான் விமானப் படையின் எதிர்காலம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் 93வது விமானப் படை நாள் கொண்டாட்ட விழாவில் விமானப்படை, எதிர்கால தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்துப் பேசியிருந்தார்.
அப்போது எலானின் கருத்து குறித்துப் பேசியிருந்த இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், “மனிதர்கள் ஓட்டும் போர் விமானங்கள் தவறாக இதுவரை யாரையும் தாக்கியதில்லை, தவறி கீழே விழுந்ததில்லை.
திறமைமிக்க ராணுவ பைலட்களால் திறம்படச் செயல்பட்டு வருகிறது. அதனால் ட்ரோன்களைவிடவும், மனிதர்கள் ஓட்டும் போர் விமானங்கள் துல்லியமான திறன்மிக்கவை.
அவர் (எலான்) ஒரு பிஸ்னஸ்மேன், அதனால் அப்படிப் பேசுகிறார். அவரது கார்கள் ரோட்டில் எப்படி ஓடுகிறது என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம். அது ஒரு சாதாரண கார் என்பதால் அதில் கோளாறு ஏற்படுவது என்பது பெரிய விஷயமாக இருக்காது. ஆனால், நாட்டின் போர் விமானங்கள் அப்படியில்லை.
நாட்டின் பாதுகாப்பில் சமரசங்கள் செய்துகொள்ள முடியாது. மனிதர்கள் இல்லாமல் எதையும் இயக்க முடியாது. அதனால் ட்ரோன்கள்தான் விமானப்படையின் எதிர்காலம் என்பது தவறான கருத்து.

புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்த வண்ணமிருக்கின்றன. அதையெல்லாம் எப்படி நாட்டின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தலாம் என்று எங்களின் R&D குழு ஆராய்ச்சிகள் செய்துவருகிறது. எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப விமானப்படையை இன்னும் அதிநவீனமாக மேம்படுத்துவோம்” என்று பேசியிருக்கிறார்.