
உலகளாவிய பால் உற்பத்தியில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 2023-24ம் ஆண்டில் நாட்டின் பால் உற்பத்தி 239.3 மில்லியன் டன்னைத் தாண்டி சாதனை படைத்தது. உலக விநியோகத்தில் சுமார் 25 சதவிகித பங்களிப்புடன் இந்தியா உள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 5 சதவிகித பங்களிப்பு செய்யும் இத்துறை, சுமார் 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குகிறது.
இத்தகைய பிரமாண்டமான உற்பத்தித் தளமானது, தொழில்முனைவோருக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக உள்ளது.
தற்போது, பால் பண்ணை விவசாயிகளின் தீவன மற்றும் பராமரிப்புச் செலவுகள் உயர்வதால், வெறும் திரவப் பாலை மட்டுமே விற்பனை செய்யும் பாரம்பரிய அணுகுமுறை போதுமான லாபத்தை ஈட்டுவதில்லை.
ஒரு லிட்டர் பாலின் அடக்க விலை சுமார் ரூ. 30 முதல் ரூ. 40 வரை இருக்கலாம். ஆனால், லாப வரம்பை அதிகரிக்க ஒரே வழி மதிப்புக் கூட்டப்பட்ட (Value-Added) பொருள்கள் தயாரிப்பிற்கு மாறுவதுதான்.
உதாரணமாக, ஒரு லிட்டர் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரின் சில்லறை விற்பனை விலை ரூ. 350 முதல் ரூ. 500/கிலோ வரையிலும், நெய்யின் (Ghee) விலை ரூ. 750 முதல் ரூ. 1200/கிலோ வரையிலும் விற்கப்படுகிறது. இங்கு நிகர லாப வரம்பு பல மடங்கு அதிகமாகிறது.
இந்தியாவில் பால் விற்பனையைத் தாண்டி பால் சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களுக்கு மிகப்பெரிய சந்தை இருக்கிறது. ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்ட பொருள்கள் நமக்கு இருக்கிறது.
இந்தியாவில் மக்கள் தொகையும் அதிகம். ஆனால், நெய் என்றாலே அது கொழுப்பு என்று சொல்லிவிடுவார்கள். எனவே வாய்ப்புகள் இன்னமும் மிக அதிகம்.
இந்தியாவில் அதிக வணிக வாய்ப்புகளை வழங்கும் மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருள்களில், நகர்ப்புறங்களில் தேவை அதிகரித்து வரும் புரதம் நிறைந்த சைவ உணவான பன்னீர் (Paneer) முக்கியமானது.

அதேபோல், ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு காரணமாக நெய் மற்றும் பிரீமியம் A2 நெய்க்கு (நாட்டு மாட்டுப் பால் நெய்) அதிக தேவை உள்ளது.
இதுமட்டுமின்றி, யோகர்ட் (Yogurt), குறிப்பாக கிரீக் யோகர்ட் போன்ற பிரீமியம் வகைகள், மற்றும் பழச் சுவையூட்டப்பட்ட லஸ்ஸி போன்ற புளிக்க வைத்த பானங்களுக்கான நுகர்வோர் தேவை தீவிரமாக உள்ளது.
பாரம்பர்ய பொருள்களான இனிப்புத் தொழிலுக்கு இன்றியமையாத கோவா/திரட்டுப்பால், கோடைக்கால பிரதானமான தயிர்/மோர் மற்றும் பாலாடைக்கட்டிகள் (Cheese) ஆகியவையும் சந்தையில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.
குறிப்பாக, சீஸ் தயாரிப்பிலிருந்து கிடைக்கும் `வேய்’ (மோர் நீர்) மூலம் அதிக லாபம் தரக்கூடிய வேய் புரோட்டீன் பவுடர் தயாரிப்பது, உடற்பயிற்சி கலாச்சாரம் வளர்ந்து வரும் இன்றைய சூழலில் ஒரு முக்கிய தொழில் வாய்ப்பாகத் திகழ்கிறது.
எனினும், குளிர்பதனக் கிடங்கு வசதியின்மை மற்றும் திறமையற்ற விநியோகச் சங்கிலி போன்ற சவால்களை, புதிய தொழில்முனைவோர்கள் சிறிய அளவில் பதப்படுத்துதல் மற்றும் தரமான உள்ளூர் பிராண்டிங் மூலம் வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம்.
மொத்தத்தில், உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா திகழும் நிலையில், மதிப்புக் கூட்டல் புரட்சியின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் வணிக வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய தருணம் இது.

இந்த சந்தையைத்தான் இலக்காக வைத்து கும்பகோணம் நகரிலிருந்து இயங்கிவரும் தமிழ் பால் எனும் நிறுவனம், இளைய தலைமுறை பொறுப்புக்கு வந்தபிறகு 20-க்கும் மேற்பட்ட பொருள்களை அறிமுகம் செய்து தமக்கென ஒரு சந்தையைப் பெற்று வருகிறது.
தமிழ் பால் நிறுவனத்தின் எக்சியூகிட்டிவ் டைரக்டர் தியாகராஜன், கடந்த 10 ஆண்டுகளாக புதிய புதிய பொருள்களை அறிமுகம் செய்துவருகிறார். அவரிடம் தமிழ் பால் வளரும் கதையைக் கேட்போம்.
தமிழ் பால் நிறுவனம் ஆரம்பித்து நீங்கள் பொறுப்புக்கு வந்த பின்னர் நீங்கள் என்னவெல்லாம் நிறுவனத்தின் சார்பில் சந்தைக்கு அறிமுகம் செய்தீர்கள்?
2015-ல் நான் பொறுப்புக்கு வந்த பின்னர் கிளைகளை அமைக்கலாம் என்று முடிவு செய்தேன். கும்பகோணம் முதல் சென்னை வரை எங்களது இலக்கை நிர்ணயித்தோம்.
அதன் பின்னர் சந்தையை ஆராய்ந்தபோது பால் மற்றும் தயிரை மட்டுமே கொண்டு கிளைகளை அமைத்துவிட முடியாது என்று புரிந்தது.
ஏனெனில் நம்மை நம்பி இந்த வணிகத்திற்குள் வருபவர்களை நாம் இதை மட்டும் விற்க சொல்ல முடியாது.
அவர்களை லாபகரமாக இயங்க வைப்பதும் நமது கடமை. எனவே புதிதாக பால் சார்ந்த பொருள்களை அறிமுகம் செய்தோம்.

முதலில் நெய், பனீர், பின்னர் பால்கோவா சார்ந்த இனிப்புகளை அறிமுகம் செய்தோம். தற்போது பால்கோவாவில் 6 வகைகளும், பால் 6 வகைகளும் விற்பனை செய்கிறோம்.
மில்க் ஷேக் 6 வகைகள் இருக்கிறது. இப்போது பால், தயிர், பனீர்,வெண்ணெய், நெய், மில்க் ஷேக், பால் சார் இனிப்புகள், இத்தனை வகைகளையும் சரியான நேரத்தில் சரியான முறையில் நாங்கள் சந்தைக்கு கொடுத்து வருகின்றோம்.
அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல். அதனால் எங்கள் இலக்கு தமிழ்நாடு இல்லை.
நாங்கள் ஒரே ஒரு சாலையை தீர்மானித்துக் கொண்டோம். புதுக்கோட்டை முதல் சென்னை வரை செல்லும் சாலைகளில் 11 மாவட்டங்களில் மட்டும் எங்கள் சேவையை இலக்காக நிர்ணயித்து செயல்படுத்தி வருகிறோம்.
தமிழ் பால் மற்ற நிறுவனங்களிடம் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
நாங்கள் நேரடியாக பாலை விவசாயிகளிடமிருந்து வாங்குகிறோம். அதோடு பாலின் ஆயுளைக் கூட்ட நாங்கள் எங்கள் பாலில் செயற்கையாக எதையும் கலப்பதில்லை, கூட சேர்ப்பதும் இல்லை.
இதை நாங்கள் சான்றிதழாகவும் வைத்திருக்கின்றோம். அதை 6 மாதத்திற்கு ஒரு முறை புதுப்பித்தும் வருகிறோம்.
ஒரு நாளைக்கு 11,000+ விவசாயிகள் எங்களுக்கு பால் வழங்குகின்றார்கள். ஒரு நாளைக்கு 70,000 லிட்டர் பால் மொத்தமாக கொள்முதல் செய்கின்றோம்.
15 நாளுக்கு ஒரு முறை பாலுக்கான கட்டணத்தை அவர்களுக்கு செலுத்திவிடுகின்றோம்.
மற்றவர்களை விட நாங்கள் பால் விலையில் சிறிது அதிகமாக கொடுத்துதான் வாங்குகின்றோம்.
எங்கள் பாலுக்கு என்று நாங்கள் தனியாக ஒரு தீவனத்தை உருவாக்கி அதை விவசாயிகளுக்குக்கொடுத்து அவர்களிடம் இந்த தீவனத்திற்கு சிறிது சிறிதாக பணம் பெற்றுக்கொள்கிறோம்.
3 – 4 மாதத்துக்கு ஒரு முறை நாங்கள் விவசாயிகளின் வீடுகளுக்கேச் சென்று மாடுகளை எங்கள் மருத்துவக்குழு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கும்.
இதை எல்லாம் ஒரு புரோட்டாகாலாகவே செய்து வருகின்றோம். ஏனெனில் எங்களது பலமே இவர்கள்தான். எனவே மாடு விவசாயிகளை நாங்கள் எங்கள் பிரதானமாகக் பார்க்கின்றோம்.
பால் பொருள் சார்ந்த தொழில்முறையில் நீங்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?
சவால் என்பது எல்லா தொழில்களிலும் நிறைய இருக்கும். எங்கள் தொழிலில் சில நிமிட தாமதங்கள் கூட பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
இயந்திரங்களில் ஒரு சிறு சிக்கல் என்றாலும் அதை சில நிமிடங்களுக்குள் நாங்கள் சரி செய்யவேண்டும். இல்லையென்றால் இயந்திரத்தில் உள்ள பால் கெட்டுவிடும்.
ஜென் ‘Z’ எனப்படும் இந்த சமூகத்தில் வேலைக்கு வருவதற்கு ஆள்கள் குறைவு. இரவு கண் முழிக்கவேண்டுமென்றால் அதெல்லாம் முடியாது என்கிறார்கள்.
அதேபோல் மற்றவர்கள் கொடுக்கும் விலையை விட நாங்கள் அதிக விலை கொடுக்க வேண்டும்.
ஏனெனில் இந்தத் தொழிலில் போட்டி அதிகம். மழைக்காலங்களில் பால் அதிகமாக கிடைக்கும். ஆனால், மழையால் மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும். எனவே பால், டீ விற்பனை குறைவாக இருக்கும்.

தமிழ்நாட்டில் இன்னொரு சிக்கல், நமது தமிழக மக்களின் நெய் பயன்பாடு மிகக் குறைவு. ஒரு மாதத்திற்கு அரை லிட்டர் கூட பயன்படுத்துவதில்லை.
ஆனால், இங்கே நமது வடநாட்டு மக்கள் பயன்பாடு மாதம் 3 முதல் 5 லிட்டர். அவர்கள் பூரி சுடவும், மோர் மிளகாய்க்கும் நெய்யில்தான் பொரிக்கிறார்கள். அவர்களின் எண்ணெய் பயன்பாடு குறைவு.
ஆக நமது மக்களின் தினசரி பயன்பாட்டில் நெய் வந்தால் அது அனைவருக்கும் மிகுந்த பயனளிக்கும், அதே சமயம் நெய் விலையும் குறையலாம்.
இன்னொருபுறம் பால் தொழிலில் போக்குவரத்து மிக முக்கியம். அதேசமயம் அதுதான் செலவு மிக்கது.
ஒருபுறம் அதற்கேற்ற மூலதனம் வேண்டும். சிக்கல்கள் இல்லாத தொழில் என்று எதுவும் இல்லை.
ஆனால், அதை சரியாக செயல்படுத்த சரியான திட்டங்கள், அதிலிருந்து வழிமுறைகள் சரியாக இருந்தால், அவற்றைச் சிறப்பாக நிர்வகித்து உங்கள் துறையில் முன்னுக்கு வரலாம். தமிழ் பால் நிறுவனமும் அப்படித்தான் செயல்படுகிறது.
கிளைகள் எப்படி அமைக்கிறீர்கள், அதன் செயல்பாடுகள் என்ன?
கிளைகள் அமைப்பது என்பது சாதாரண பணி அல்ல. கிளைகள் எடுப்பவர்களுக்கு முதலில் பயிற்சி, அதன் பின்னர் இடம் தேர்வு செய்ய நாங்களும் கூட சென்று பார்த்து அமைப்பது.
பிறகு இயந்திரங்களைக் கட்டமைத்து அவர்களை விற்பனைக்கு பயிற்றுவிப்பது ஆகியவற்றை நாங்கள் செய்கின்றோம்.
அதுமட்டுமல்லாமல் வாரம் ஒரு முறை எங்கள் அதிகாரிகள் அவர்களுடன் சென்று பல இடங்களில் பால் விற்பனைக்காக பேசி ஆர்டர்கள் எடுக்க கூட இருப்பார்கள்.
இதுபோல 150 கிளைகளை சென்னை பெருவழியில் அமைக்க திட்டமிட்டிருக்கிறோம்.
பாலை மதிப்புக்கூட்டுவதில் நீங்கள் சந்திக்கும் சிக்கல்கள் என்ன?
சிக்கல்களில் பருவநிலையும் ஒரு பிரதான காரணம். அதனால் எல்லா நாளும் நம்மால் 70,000 லிட்டர் பால் கிடைக்குமா என்றால் சில நாள்கள் பால் கிடைப்பதில் சிக்கலிருக்கும்.
சில நேரம் பால் அதிகமாக கிடைக்கும். ஆனால், விற்பனையில் அவ்வளவு ஆர்டர்கள் இருக்காது. இருப்பினும், இந்தக் காரணத்தைச் சொல்லி பாலை நம்மால் வாங்காமல் இருக்க முடியாது. அப்புறம் அவர்கள் நமக்கு பாலை வழங்கமாட்டார்கள்.
உண்மையில் இது சிக்கல். ஆனால், நாம் சிக்கலாக பார்க்கக்கூடாது, சவாலாக பார்க்கலாம். இன்னொருபுறம் வியாபார மந்த நிலை. ஏதாவது ஒரு காரணத்தினால் பொதுமக்களின் வாங்கும் சக்தி குறையும்போது நமது பொருள்கள் விற்காமல் தேக்கமடையும் நிலையும் ஏற்படும்.
அதனால் இப்போது நாங்கள் மதிப்புகூட்டப்பட்ட பொருள்களை மட்டும் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யும் வழிமுறையை எடுத்திருக்கிறோம். தொழில்முனைவோர்களுக்கு சிக்கல்கள் என்றாலே வாய்ப்புகள்தானே!
தமிழ் பால் நிறுவனம் 40 வருடமாக செயல்பட்டாலும் நிறைய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும்போது நிறைய முதலீடு தேவைப்பட்டிருக்கும்? எப்படி தேவையான மூலதனத்தை தேவையான நேரத்தில் பெற்றீர்கள்?
எங்கள் பெரும்பாலான முதலீடு வங்கிக்கடன்தான். எங்கள் தொழில் ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை நாங்கள் பயன்படுத்துவது சிட்டி யூனியன் வங்கிதான்.
ஏறக்குறைய 40 வருடம். அந்த வங்கியோடே வளர்ந்தோம். அதன்பின் சில அரசாங்க சலுகைகளைப் பெற, நாபார்டு மற்றும் டி.என் அபெக்ஸ் வழியாகப் பெற்றோம்.
ஆனாலும், பெரும்பாலும் வங்கிக்கடன்தான். அதேசமயம் விவசாயம் மற்றும் பால் வளத்துக்கு என்றே தனியாக ஒரு பிரிவே உள்ளது.
அதன்வழியாக குளிர்சாதன அறை, பால் மாடு வாங்க கடன் என பல கடன்களை அவர்கள் வழியாக பெறலாம்.

பால் பொருள்களை ஏற்றுமதி செய்ய நீங்கள் திட்டமிட்டுள்ளீர்களா?
பால் சார்ந்த பொருள்களுக்கான ஏற்றுமதி செய்ய 14 மாதங்களாக பெரிய ப்ராசஸ் பணியை முடித்து உள்ளோம்.
விரைவில் அதற்கான சான்றிதழ் கிடைத்துவிடும். அப்படி கிடைத்துவிட்டால் நாங்கள் நேரடியாக ஏற்றுமதி செய்யலாம். விரைவில் உலகமெங்கும் தமிழ் பால் நிறுவனத்தின் தயாரிப்புகள் கிடைக்கும்.
எங்கள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு நாங்கள் முதலில் சொல்வது, `நமது தயாரிப்புகளின் முதல் வாடிக்கையாளர்கள் நீங்கள்தான்.
எனவே, அதற்கு ஏற்றவாறு நீங்கள் பொருள்களை உருவாக்கவேண்டும்’ என்ன்பதுதான். அப்படி உருவாக்கிய பொருள்கள்தான் விரைவில் ஏற்றுமதிக்கு தயாராகி வருகிறது.
சிறிய அளவில் பால் தொழில்முனைவோர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?
பால் விற்பனை என்பது வாடிக்கையாளர்களின் விருப்பத்தைப்பொறுத்தது. சிலருக்கு இந்த மாட்டுப்பால்தான் வேண்டும் என்பார்கள். சிலருக்கு எந்தப் பால் இருந்தாலும் சரி என்பார்கள்.
சிறிய அளவில் செய்யும்போது அவர்களுக்கு தனி பயனாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப செய்யும்போது நிச்சயம் அவர்களுக்கான வாய்ப்பு அங்கே உண்டு. சிலர் கண்ணாடி பாட்டில் இருந்தால்தான் வாங்குவார்கள்.

ஆனால், வாடிக்கையாளர்கள் அதிகமாகும்போது அதே வகையான பால் கிடைப்பதை அவர்கள் உறுதி செய்யவில்லை என்றால் சிக்கல் அவர்களுக்குத்தான்.
அதேபோல் பால் மட்டுமே அவர்கள் விற்கக்கூடாது, இதர மதிப்புகூட்டு பொருள்களையும் அவர்கள் விற்கவேண்டும்.
பாலில் லாபத்தை விட மதிப்புகூட்டு பொருள்களில் லாபம் நன்றாகவே இருக்கும்.
எனவே அவர்கள் இந்த முறையில் வருமானத்தை பெருக்கவும் முயலவேண்டும்.
தமிழ்நாடு டைரி அசோசியேஷன்ஸ் ( TNDA) சார்பில் சில வேண்டுகோள்களை நாங்கள் வாசர்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகின்றோம்.
ஆலோசனை: பெருநகரங்களில் வசிப்பவர்கள் அதிகமாக சம்பாதிக்க மாடு வாங்கி அதை அப்படியே தெருவில் விட்டு விட்டு பால் கறக்கும் நேரத்தில் மட்டும் அதைக்கொண்டு வந்து பால் கறந்துவிட்டு திரும்ப அதைத் தெருவில் விட்டுவிடுகின்றனர்.
கண்டதை சாப்பிட்டு பால் கறக்கும்போது அது என்ன சாப்பிட்டது என தெரியாமலேயே பால் கறந்துவிடுகின்றனர். இது ஒரு வகையில் பெரும் சமூக சீர்கேடு.
சமீபத்தில் நீங்கள் செய்திகளில் படித்திருக்கலாம், `ஒரு பசுவின் வயிற்றிலிருந்து 2 – 3 கிலோ பிளாஸ்டிக் எடுத்துள்ளார்கள்’ என்று.
அவர்களுக்கு ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ளவர்களை குழுவாக ஒன்றிணைத்து அவர்கள் வழியே மேய்ச்சலுக்கு உட்படுத்தியும் வருமானம் ஈட்டலாம்.

கோரிக்கை: தமிழ்நாட்டின் பால் தேவையை பெரும்பாலும் தனியார் நிறுவனங்கள்தான் பூர்த்தி செய்கிறது.
ஆனால், ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றுபவர்களுக்கு மட்டும் பல சலுகைகள். மாடு வாங்க, தள்ளுபடி விலையில் தீவனம் என பல அரசு சலுகைகள்.
அரசின் சலுகை எல்லா பால் மாடு வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் கிடைக்கவேண்டும். ஆனால், ஆவினில் பால் ஊற்றினால் மட்டுமே சலுகைகள் கிடைக்கும் என்பதை அனைத்து தனியார் விவசாயிகளுக்கும் கிடைக்கவேண்டும்.
அவர்களை பிரித்துப் பார்க்க வேண்டாம். எல்லாருக்கும் அரசின் சலுகைகள் கிடைக்க வேண்டும் என்றும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.