• October 3, 2025
  • NewsEditor
  • 0

ஒவ்வொரு ஆண்டும் தசராவையொட்டி மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே மும்பை தாதரில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கம். பால் தாக்கரே இறந்த பிறகு அதனை உத்தவ் தாக்கரே ஒவ்வொரு ஆண்டு செய்து வந்தார். சிவசேனா 2023ம் ஆண்டு இரண்டாக உடைந்த பிறகு உத்தவ் தாக்கரே போராடி சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வாங்கி பொதுக்கூட்டம் நடத்தினார். இந்த ஆண்டு கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்தது. இதனால் சிவாஜி பார்க் மைதானம் ஈரமாக இருந்தது. இதனால் பொதுக்கூட்டம் திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் நேற்று மழை ஓரளவு குறைந்திருந்ததால் உத்தவ் தாக்கரே திட்டமிட்டபடி இரவு பொதுக்கூட்டத்தை நடத்தினார்.

ஏக்நாத் ஷிண்டே

இக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே வழக்கம்போல் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பா.ஜ.கவை சாடினார். இதில் பேசிய உத்தவ் தாக்கரே,” பா.ஜ.க நிர்வாகத்தின் கீழ் மும்பை மாநகராட்சியில் நடந்த ஊழலை வெளிக்கொண்டு வர வெள்ளை அறிக்கை வெளியிடுவோம். புலியின் தோலை போர்த்திய கழுதையின் கதை நமக்குத் தெரியும். ஆனால், பாலாசாகேப் (தாக்கரே) காவி சால்வை அணிந்த கழுதையின் படத்தை இப்போதுதான் முதன்முறையாகப் பார்த்திருக்கிறேன்,” என்று ஏக்நாத் ஷிண்டே பெயரை சொல்லாமல் விமர்சனம் செய்தார்.

அவர் மேலும் பேசுகையில்,” அமித் ஷா தேச பக்தி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது மகன் ஜெய் ஷா பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுகிறார். மகாராஷ்டிராவில் பெய்த மழையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு கொடுக்கவேண்டும். மழை பாதிப்புக்கு இழப்பீடு வழங்க முறைப்படி கோரிக்கை அனுப்பும்படி பிரதமர் நரேந்திர மோடி கேட்கிறார். ஆனால் தேவேந்திர பட்னாவிஸ் அரசு இன்னும் இழப்பீடு விபரங்களை கணக்கெடுத்துக்கொண்டிருக்கிறது.

ஆனால் தேர்தல் வரக்கூடிய பீகாரில் பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.10 ஆயிரம் டிரான்ஸ்பர் செய்திருக்கிறார்கள். பா.ஜ.க சம்பள வாக்காளர்களை உருவாக்குகிறது. மும்பையின் இரவு வாழ்க்கை குறித்து ஆதித்ய தாக்கரே சொன்னபோது அதனை விமர்சனம் செய்தவர்கள் இப்போது அதே திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார்கள். மும்பை மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றால் இந்த மும்பையை அதானியிடம் கொடுத்துவிடுவார்கள்.

பா.ஜ.க ஒரு அமீபா போன்றது. அமீபா மனிதனின் வயிற்றுக்குள் சென்றால் வயிற்றிக்கு பாதிப்பு ஏற்படுவது போல் அந்த அமீபா ரூபத்தில் பா.ஜ.க இந்த சமுதாயத்தின் உடம்பில் நுழைந்து கொண்டு சமுதாயத்தை கெடுத்துக்கொண்டிருக்கிறது. ராஜ்தாக்கரேயுடன் ஒன்றாக இருப்பதற்காகவே அவருடன் இணைந்திருக்கிறேன்”என்று பேசினார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரேக்கு போட்டியாக ஏக்நாத் ஷிண்டே கோரேகாவில் தசரா பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் பேசிய ஏக்நாத் ஷிண்டே,”தொண்டர்கள் மாநகராட்சி உட்பட உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்தவேண்டும். மும்பை மாநகராட்சித் தேர்தலுக்குப் பிறகு உத்தவ் தாக்கரேயுடன் அவரது நிழல்கூட இருக்காது.

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநகராட்சிகளில் காவிக்கொடியை பறக்கவிடுவதுதான் எங்களது ஒரே நோக்கம். இத்தேர்தலில் மஹாயுதி கூட்டணி இணைந்து போட்டியிடும். தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறாவிட்டால் மும்பை 25 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றுவிடும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது”என்று தெரிவித்தார். முன்னதாக உத்தவ் தாக்கரே பேச்சுக்கு பா.ஜ.க விடுத்துள்ள பதிலளிக்கையில்,”மாநகராட்சி தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் கான் மேயராகிவிடுவார்”என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *