• October 3, 2025
  • NewsEditor
  • 0

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27), கரூரில் பரப்புரை மேற்கொண்டார் தவெக தலைவர் விஜய். அப்போது அங்கே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அதில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தை விசாரிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து 8 எம்.பிக்கள் குழு ஒன்றை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அமைத்தார். இந்தக் குழுவின் தலைவராக ஹேமமாலினி எம்.பி நியமிக்கப்பட்டார்.

இந்தக் குழுவில் அமைச்சர் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், அபராஜிதா சாரங்கி, ரேகா சர்மா, சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஷிண்டே, தெலுங்கு தேசக் கட்சியில் புட்டா மகேஷ் ஆகியோர் இடம்பெற்றனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்.பி குழு

இந்த ஆய்வுக்குழுவின் விசாரணைக்குப் பிறகு, அமைச்சர் அனுராக் தாக்கூர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், “கரூரில் நடந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விரிவான விசாரணை நடத்த வேண்டும். இந்தச் சோகத்துக்கான முதன்மை காரணங்கள் என்ன?

உள்ளூர் அதிகாரிகளால் செய்யப்பட்ட முதற்கட்ட ஏற்பாடுகள், இதுவரை அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க மாநில அரசால் திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவற்றின் பகுப்பாய்வு அறிக்கை வெளியிட வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின் இந்தச் சூழ்நிலைக்கு முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். அதற்கான அறிக்கையை விரைவில் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

  • கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட வழிவகுத்த முதன்மை காரணிகள் மற்றும் நிகழ்வுகளின் வரிசை என்ன?

  • நிகழ்விற்கு முன்னும் பின்னும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் நிர்வகிக்கவும் நிர்வாகம் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்கள் என்ன ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன?

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
  • ஆரம்ப கண்டுபிடிப்புகளின்படி, தடுப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும் சோகத்திற்குப் பங்களித்த குறைபாடுகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகள் என்ன?

  • எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க மாநில அரசு திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளைத் தயவுசெய்து பரிந்துரைத்துப் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்” என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *