• October 3, 2025
  • NewsEditor
  • 0

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை காரணமாக சோலாப்பூர், அகில்யா நகர் மற்றும் மராத்வாடா பகுதியில் பல லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

நெற்பயிர்கள், பழப்பயிர்கள் என விவசாயிகளின் ஒட்டுமொத்த பயிர்களையும் வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தீபாவளிக்கு முன்பு இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

சேத விபரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மும்பை அருகில் உள்ள பால்கர் மாவட்டத்தில் 700 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகிவிட்டது.

சோலாப்பூர் தேசியநெடுஞ்சாலையிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விவசாயிக்கும் பல லட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி

ஆனால் தங்களுக்கு மாநில அரசு சொற்ப அளவு மட்டுமே இழப்பீடு கொடுப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மராத்வாடா பகுதியில் வழக்கமாக மழை குறைவாகப் பெய்யும். ஆனால் இந்த ஆண்டு மழை முடியவேண்டிய நேரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து அனைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டது.

வெள்ளச் சேதப் பகுதிகளை அரசியல் தலைவர்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர். பீட் மாவட்டத்தில் உள்ள மஜல்காவ் என்ற இடத்தில் வெள்ளப்பகுதிகளைப் பார்வையிட சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் எம்.பி. பஜ்ரங் சோனாவானே சென்றார். ஆனால் அங்குச் செல்ல முடியாத அளவுக்கு அனைத்து பகுதியிலும் மழை நீர் சூழ்ந்து இருந்தது. இதையடுத்து தற்காலிக படகு ஒன்றை அவரது கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் தயார் செய்தனர்.

அதில் எம்.பி.சோனாவானே அமர்ந்து கொண்டார். அந்தத் தற்காலிகப் படகை பொதுமக்களும், கட்சித் தொண்டர்களும் தண்ணீரில் தள்ளிச்சென்றனர். அவர்கள் ‘தள்ளு, தள்ளு’ என்று சொல்லிக்கொண்டே தள்ளிச்சென்ற வீடியோ சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகி இருக்கிறது.

எம்.பி. கீழே விழுந்துவிடுவோமோ என்ற பதட்டத்தில் கையை படகில் ஊற்றியபடி பதட்டத்துடன் அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் மற்றொரு கட்சி நிர்வாகி அமர்ந்திருந்தார்.

மகாராஷ்டிரா முதலமைச்சர் அஜித் பவார்
அஜித் பவார்

பீட் பகுதியில் மட்டும் வெள்ளம் பாதித்த பகுதியிலிருந்து 11 ஆயிரம் பேர் பாதுகாப்பான முறையில் மாற்றப்பட்டுள்ளனர். நாசிக் பகுதியில் மழைக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தவிர அகில்யா நகர், ஜல்னா, யவத்மால் மற்றும் தாராசிவ் பகுதியிலும் உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கின்றன. மராத்வாடாவில் ஓடும் ஜெயக்வாடி ஆறு அபாயக் கட்டத்தைத் தாண்டி செல்கிறது. மொத்தம் 50 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு விவசாயப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *