• October 3, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: எனக்குக் குழந்தை பிறந்து 6 மாதங்கள் ஆகின்றன. தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். தாய்ப்பால் கொடுக்கும் வரை பீரியட்ஸ் வராது என்றும், அந்தக் காலத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் கருத்தரிக்காது என்றும் சொல்கிறார்களே, அது உண்மையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். 

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

பிரசவமான புதிதில், அதாவது 6-8 மாதங்களுக்கு கருத்தரிக்காது என்ற எண்ணம்  பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். அது 100 சதவிகிதம் நம்பகமானதல்ல.

குழந்தை பிறந்த முதல் மூன்று அல்லது நான்கு வாரங்கள் வரை ஓவுலேஷன் எனப்படும் அண்டவிடுப்பு நிகழாது. அதனால் பீரியட்ஸ் வராது. இதை மருத்துவத்தில்  ‘லாக்டேஷன் அமெனோரியா’ (Lactation amenorrhea)  என்று குறிப்பிடுகிறோம். 

அந்த நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக் கொண்டால் கருத்தரிக்க வாய்ப்பில்லைதான். ஆனால், நடைமுறையில் குழந்தை பிறந்த முதல் சில வாரங்களில் யாரும் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

அந்த 3- 4 வாரங்களுக்குப் பிறகு அண்டவிடுப்பு நிகழ்வு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். 

தாய்ப்பால் கொடுக்கும் போது ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் அதிகம் சுரக்கும். அதன் விளைவாக, மற்ற பெண் ஹார்மோன்களின சுரப்பு சற்று குறையும்.

அதனால் பீரியட்ஸ் வராது. ‘பீரியட்ஸ் தான் வரலையே, தாம்பத்திய உறவு வெச்சுக்கிட்டா சேஃப்தான்’ என சிலர் நினைப்பார்கள்.

ஆனால், ஓவுலேஷன் நடந்துகொண்டிருப்பதால், பீரியட்ஸ் வராவிட்டாலும் இவர்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டு.

பிரசவமான பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் வரை கருத்தரிக்காது என்று நினைக்க வேண்டாம்.
பிரசவமான பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் வரை கருத்தரிக்காது என்று நினைக்க வேண்டாம்.

‘குழந்தைக்கு பால் கொடுத்துட்டுதான் இருக்கேன். இன்னும் பீரியட்ஸும் வரலை. ஆனா, வாந்தி, தலைச்சுற்றல் அறிகுறிகள் இருந்ததால டெஸ்ட் பண்ணிப் பார்த்தோம். பிரெக்னன்சி பாசிட்டிவ்னு வந்திருக்கு’ என்று வருபவர்களை நிறைய பார்க்கிறேன்.

இதற்காகவே பிரசவம் முடிந்ததுமே காப்பர்டி பொருத்திக்கொள்ளவோ, காண்டம் உபயோகிக்கவோ, புரொஜெஸ்ட்ரான் மட்டும் உள்ள மாத்திரைகள் (பிரசவமான பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் உள்ள மாத்திரைகள் தர மாட்டோம்) எடுத்துக் கொள்ளவோ அறிவுறுத்துவோம்.

ஊசி வடிவ மருந்துகளும் இருக்கின்றன. எனவே, பிரசவமான பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் வரை கருத்தரிக்காது என்று நினைக்க வேண்டாம்.

பீரியட்ஸ் வரவில்லை என்றால், அந்த இடைப்பட்ட நாள்களில் தாம்பத்திய உறவு நிகழ்ந்திருக்கும்பட்சத்தில், கருத்தரிப்புக்கான டெஸ்ட் செய்து பார்ப்பது பாதுகாப்பானது.


உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   
 

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *