
கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் நீதிமன்ற விசாரணை, அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான தனிநபர் ஆணையத்தின் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதற்கிடையில், தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலவாறு பேசிவருகின்றன.
இந்த நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தருமபுரியில் தனது அரசியல் சுற்றுப்பயண பொதுக்கூட்டத்தில் மக்களிடம் கரூர் சம்பவம் குறித்து பேசினார்.
கரூரில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திவிட்டு உரையைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, “ஆட்சியாளர்கள் உரிய பாதுகாப்பு வழங்கியிருந்தால் கரூரில் இன்று 41 உயிர்கள் காக்கப்பட்டிருக்கும்.
இந்த அரசாங்கம்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். ஆட்சியாளர்களைப் பார்த்துதான் கேட்கமுடியும்.
163 சட்டமன்றத் தொகுதிகளில் பொதுக்கூட்டத்தில் மக்களை நான் சந்தித்தேன். 5, 6 மாவட்டங்களில்தான் காவல்துறை பாதுகாப்பு கொடுத்தார்கள்.
மற்ற மாவட்டங்களில் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பாதுகாப்போடுதான் கூட்டம் நடைபெற்றது.
ஆளுங்கட்சி கூட்டம் நடத்தினால், ஆளில்லாத சாலைகளில்கூட பாதுகாப்பு கொடுக்கிறார்கள்.
கரூர் சம்பவம் பற்றி எப்படி ஒரு துறை செயலாளர் சொல்ல முடியும். தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, துறை செயலாளரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.

அங்கே இருக்கின்ற முன்னாள் அமைச்சர் முகத்தில் பயம் தெரிகிறது. அதிகாரிகளும், முன்னாள் அமைச்சரும் எதற்காக மாறி மாறி பொய் சொல்கிறீர்கள்.
இனியாவது அரசியல் கட்சிகள் நடத்துகின்ற கூட்டங்களுக்கு, எந்தக் கட்சி என்று பிரித்துப் பார்க்காமல் முழுமையான பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
அ.தி.மு.க ஆட்சியில் அனைத்துப் போராட்டங்களுக்கும் அனுமதி கொடுத்தோம். ஆனால், இந்த ஆட்சியில் ஜனநாயகத்தைப் பார்க்க முடியவில்லை.
கரூரில் எங்கள் எழுச்சிப் பயணம் கூட்டத்துக்கு ரவுண்டானா பகுதியைத்தான் கேட்டோம்.
ஆனால், சம்பவம் நடந்த இடத்தைத்தான் கொடுத்தார்கள். வேறு வழியில்லாமல் அங்கு நடத்தினோம்.
நான் முதலமைச்சராக இருந்தபோது, ரவுண்டானா பகுதியில் தி.மு.க பொதுக்கூட்டம் நடத்த 2 முறை அனுமதி கொடுத்தோம்.

மற்ற எதிர்க்கட்சிகளுக்கு ஏன் அனுமதி கொடுப்பதில்லை. ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் இந்த ஆட்டம் போடுகிறீர்கள்.
இதற்கெல்லாம் மக்கள் முடிவு கட்டுகின்ற நேரம் வந்துவிட்டது என்பதை ஸ்டாலின் உணர வேண்டும்” என்று கூறினார்.