• October 2, 2025
  • NewsEditor
  • 0

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கும் இடையேயான அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார். அதில், “1925-ல் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் தொடங்கிய ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்), அரசியல் விடுதலைக்கு அப்பாற்பட்டு ஆன்மிகமும் ஒழுக்கமும் சார்ந்த முழுமையான தேசிய எழுச்சியை நோக்கி இயங்கியது. ஸ்வாமி விவேகானந்தரின் உபதேசத்தால் ஊக்கமடைந்த இந்த இயக்கம், தனிநபர் ஒழுக்க மேம்பாட்டின் வழியாக சமூகத்தை மாற்றும் நோக்கத்துடன் உருவானது. எனக்கு ஆர்.எஸ்.எஸ்-உடன் தொடர்பான முதல் அனுபவம் 1981-ல் கேரளத்தில் காவல் அதிகாரியாக பணிபுரிந்தபோது கிடைத்தது.

ஆளுநர் வெளியிட்டிருக்கும் புகைப்படம்

கண்ணூரில் சிபிஎம்–ஆர்.எஸ்.எஸ் மோதலில், சட்டவிரோத குண்டுகளைப் பறிமுதல் செய்ததால், அரசியல் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டேன். பின்னர் வடகிழக்கில் உளவுத்துறையில் பணிபுரிந்தபோது, ஆர்.எஸ்.எஸ் பிரசாரகர்கள் அங்குள்ள கிராமங்களில் வாழ்ந்து, கல்வி, சுகாதாரம், சமூக ஒற்றுமை போன்ற துறைகளில் மக்களுக்கு அன்போடு சேவை செய்வதை நேரில் கண்டேன். எதிர்ப்புகள், தாக்குதல்கள், உயிரிழப்புகள் கூட நிகழ்ந்தாலும், அவர்கள் பணியை நிறுத்தவில்லை. இயற்கை பேரிடர்கள், வன்முறைகள், கோவிட்-19 போன்ற சூழல்களில், ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் உயிர் பணயம் வைத்து நிவாரண உதவிகளைச் செய்தனர். மேலும், 1965 முதல் “SEIL” திட்டத்தின் மூலம், வடகிழக்கு மாணவர்களைப் பிற மாநில குடும்பங்களில் தங்கி, நாட்டின் பன்முக பண்பாட்டை அனுபவிக்கச் செய்து, தேசிய ஒருமைப்பாட்டை வளர்த்தது.

இவ்வாறு, நூற்றாண்டு காலத்தில், ஆர்.எஸ்.எஸ் நாடு முழுவதும் பரவி, சமூகத்தின் அடிப்படையிலிருந்து தேசிய உணர்வையும் பெருமிதத்தையும் ஊட்டியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், பாரத மாதாவுக்காகவும், இந்த மகத்தான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையை அர்ப்பணித்த ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் அவர்களுக்கும், தன்னலமின்றி தியாகம் செய்த எண்ணற்ற ஸ்வயம் சேவகர்களுக்கும் எனது மனமார்ந்த மரியாதையைச் செலுத்துகிறேன். ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்” என்று கூறியிருக்கிறார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

இதனைத் தொடர்ந்து காந்தி மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ” சமூகத்தில் அனைவரும் சமம் என மகாத்மா காந்தி கூறினார். ஆனால், தமிழ்நாட்டில் சில கிராமங்களில் தலித் மக்கள் குறிப்பிட்ட பகுதிக்குச் செல்ல முடியாமலும், செருப்பு போட்டு தெருக்களில் நடக்க முடியாமலும் இருப்பதாகப் தினசரி செய்தித்தாள்களில் படிக்கிறேன். வகுப்பறைகளில் தலித் மாணவர்கள் ஒரு புறமும், தலித் அல்லாத மாணவர்கள் ஒருபுறமும் அமரவைப்பதாகத் தெரிகிறது. தலித் சமூகத்திற்கு எதிரான இந்த சமூக அடக்குமுறையில் தமிழ்நாடு மோசமான சாதனையைப் படைத்திருக்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழ்நாட்டைப் போல வேறு எங்கும் மோசமான சம்பவங்கள் நடைபெறவில்லை. நாம் காந்தியை மறந்து விட்டதன் காரணமாகவே இது நடக்கிறது. இது போல நடப்பதற்கு நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும்” என்று ஆளும் திமுக அரசைக் கடுமையாகச் சாடியிருந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *