
200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் காமெடி நடிகர் சாம்ஸ்.
சாம்ஸ் என்பதைத் தாண்டி ̀அறை எண் 305-ல் கடவுள்’ படத்தின் ஜாவா சுந்தரேசன் என்ற கதாபாத்திரப் பெயரைச் சொன்னால்தான் இவரின் முகம் சட்டென பலருக்கு நினைவுக்கு வரும்.
அந்தளவிற்கு அந்தக் கதாபாத்திரம் இவரை மக்களிடம் பரிச்சயமாக்கியது.
இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் சாம்ஸ் என்ற பெயருடன் நடித்தவர் தற்போது தனது பெயரையே ஜாவா சுந்தரேசன் என மாற்றிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்.
̀அறை எண் 305-ல் கடவுள்’ படத்தின் இயக்குநர் சிம்புதேவனையும் நேரில் சந்தித்து அந்தப் பெயரையே தான் வைத்துக் கொள்ளப் போவதாக அனுமதி கேட்டிருக்கிறார்.
இது குறித்து அவர், “அன்பான ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நண்பர்களுக்கும் மீடியாவைச் சேர்ந்தவர்களுக்கும் இன்று விஜயதசமி நன்னாளில் ஒரு செய்தி… என்னுடைய இயற்பெயர் சுவாமிநாதன்.
திரைத்துறைக்கு வந்த பிறகு நான் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக எனது பெயரை ‘சாம்ஸ்’ (CHAAMS) என்று மாற்றிக் கொண்டேன். ‘சாம்ஸ்’ என்ற பெயரில் தான் பல வருடங்களாக பல படங்களில் நடித்து வந்துள்ளேன்.
ஆனால் இயக்குநர் சிம்புதேவன் அவர்களின் இயக்கத்தில் வந்த ‘அறை எண் 305-ல் கடவுள்’ படத்தில் நான் நடித்த ‘ஜாவா சுந்தரேசன்’ கதாபாத்திரம் மிகவும் புகழ்பெற்று, அந்தப் பெயரைச் சொல்லியே ரசிகர்கள் என்னை அழைப்பதும், அதை வைத்து பல மீம்ஸ்கள் உருவாக்கி, பகிர்ந்து, பரவியதால் அந்தப் பெயர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டது.
எங்கே சென்றாலும் என்னைப் பார்க்கும் ரசிகர்கள் ‘ஜாவா சுந்தரேசன்’ என்று அழைப்பதோடு, தங்கள் சுற்று வட்டாரத்தில் அசுர வளர்ச்சி அடைந்தவர்களை ‘நாங்கள் ஜாவா சுந்தரேசன் என்றுதான் அழைப்போம்’ என்று சொல்லி, அந்தக் காட்சியில் நான் மூன்று விதமான கெட்டப்புகளில் வந்து அலப்பறை செய்தேன் என்று சிலாகித்து பாராட்டி மகிழ்கின்றனர்.
எனவே மக்கள் விருப்பமே மகேசன் விருப்பமாக ஏற்று, இன்று முதல் (02.10.2025) எனது பெயரை ‘ஜாவா சுந்தரேசன்’ என்று மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளேன்.
எனக்கு கிடைத்த இந்தப் பெயருக்கும் புகழுக்கும் பெருமைக்கும் காரணம் ‘ஜாவா சுந்தரேசன்’ என்ற கேரக்டரை உருவாக்கிய இயக்குநர் சிம்புதேவன் அவர்களே.
அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துவிட்டு, முறைப்படி அவரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, அவரின் வாழ்த்துக்களோடு இனி நான் ‘ஜாவா சுந்தரேசன்’ ஆக எனது திரைப்பயணத்தைத் தொடர்கிறேன்.

இந்த நல்ல தருணத்தில் அருமையான பல சிறந்த நகைச்சுவைக் கதாபாத்திரங்களை எனக்குத் தந்து மக்களை மகிழ்விக்க வாய்ப்பளித்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும், சினிமாத் துறையைச் சார்ந்த மற்ற நண்பர்களுக்கும், உதவிய ஊடகத்துறை அன்பர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.
அனைவரும் வழக்கம்போல் தொடர்ந்து உங்கள் அன்பையும் ஆதரவையும் தந்து, இனி என்னை ‘ஜாவா சுந்தரேசன்’ என்றே அழைக்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.