
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர், “பெண் குழந்தைகள் அதிகமாகப் பிறப்பதால் பெற்றோர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.
எனவே, கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என ஸ்கேன் செய்து பார்க்கும் உரிமையைப் பெற்றோர்களுக்கு வழங்கவேண்டும்” எனப் பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாக முகத்தை மூடிக்கொண்டு பேசி வீடியோ வெளியிட்டது, சமூக வலைதளத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவுக்கு எதிராகக் கண்டனங்களும் குவிந்தன.
கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? எனக் கண்டறிவது, பெண் குழந்தையாக இருந்தால் அதைக் கலைக்கும் கருக்கொலைகள் ஆகியவற்றைத் தடுக்க, எம்.டி.பி ஆக்ட் எனப்படும் கருக்கலைப்பு சட்டம் (Medical Termination of Pregnancy Act) உள்ளது.
இச்சட்டத்தின்படி, பாலினத்தைக் கண்டறிந்து சொல்பவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது.
டாக்டர்கள் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டால் சிறைத் தண்டனையோடு அவர்கள் மருத்துவத் தொழிலையே தொடரமுடியாத அளவுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட, கடுமையான சட்டங்கள் இருந்துகொண்டிருக்கும் சூழலில், விகடன் கடந்தவாரம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்தைத் தொடர்புகொண்டு, நேர்குரிப்பிட்ட வீடியோவையும் அனுப்பி சம்பந்தப்பட்ட யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியது.
இந்த நிலையில், அந்த முகமூடி யூடியூபர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர், பெயர் தீபன் என்றும், அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட எஸ்.பி அரவிந்த் நம்மிடம் பேசும்போது, “உங்களைப் போலவே, யூடியூபரின் வீடியோக்களை சிலர் அனுப்பினார்கள்.
பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாகப் பேசிய யூடியூபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளோம். சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அவரைத்தொடர்ந்து, தென்காசி சைபர் க்ரைம் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசரிடம் பேசினோம்.
அவர், “பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிராகப் பேசிய யூடியூபர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளோம்.
மேலும், வீடியோக்களை நீக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தென்காசி மாவட்டத்தில் இனிமேல் யார் இப்படி பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாகப் பேசினாலும் கடுமையாகத் தண்டிக்கப்பக்கடுவார்கள்” என்றார்.
அவரைத்தொடந்து அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் சாமிநாதனிடம், “இப்படி வீடியோ வெளியிடுவது எப்படிப்பட்ட குற்றம்?” என்று கேட்டோம்.
அதற்கு,“கடந்த 15 வருடங்களாகத் தருமபுரி, கடலூர், அரியலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பெண் சிசுக்கொலைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, சிசுவின் பாலினத்தைக் கண்டறியும் ஸ்கேன் மையங்களைக் கண்டுபிடித்து நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பெண் சிசுக்கொலைகளை ஆதரிப்பதும், கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை ஸ்கேன் செய்து பார்ப்பதும் சட்டப்படி குற்றச்செயல்.
இந்தக் குற்றத்தைச் செய்பவர்களைவிட, இதைச் செய்யத் தூண்டுவதே மிகப்பெரிய குற்றமாகும். அதனால், அந்த இளைஞன் வீடியோவில் கூறியது சமூகத்திற்கு எதிரான குற்றம்.

அதேபோல், ஆண்களின் பிறப்பு விகிதம் குறைகிறது என அவர் சுட்டிக்காட்டிய தகவலும் பொய்யானது.
உண்மையில், புள்ளிவிவர அடிப்படையில் கணக்கிட்டால் ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தைவிட, பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம்தான் குறைந்துகொண்டே வருகிறது” தரவுகளுடன் பட்டியலிட்ட டாக்டர் சாமிநாதன்.
மேலும் தொடர்ந்து பேசிய டாக்டர் சாமிநாதன், “ஏழையோ, பணக்காரரோ கருவில் இருக்கும் பாலினத்தைத் தெரிந்துகொண்டு யார் அழிக்க முயற்சித்தாலும், அதைத் தூண்டினாலும், அதற்குத் துணைபோனாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழிவகை உண்டு. அவர்களைக் கைது செய்யவும் சட்டத்தில் இடம் உண்டு.
1994-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பாலின தேர்வு தடை சட்டத்தின்படி, கருவிலிருக்கும் சிசுவின் பாலினத்தை ஸ்கேன் செய்து பார்ப்பது சட்டப்படி குற்றம்.
1990-களில், சிசுவிற்கு இதயக்கோளாறு, இன்னபிற பிரச்னைகளைக் கண்டறிய மட்டுமே கொண்டுவரப்பட்ட ஸ்கேன் தொழில்நுட்பத்தை, பாலினத்தைக் கண்டறிய தவறாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

சமூகத்தில் ஏற்கனவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், வரதட்சணைக் கொடுமைகள், குடும்ப வன்முறைகள் எனப் பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது, அந்த இளைஞர் இப்படிப் பேசியிருப்பது பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஊக்குவிப்பதுபோல் உள்ளது.
பாலின தேர்வுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தை தமிழ்நாட்டில்தான் மிகச்சிறப்பாகச் செயல்படுத்துகிறார்கள்.
அதாவது, சிசுக்கொலை செய்கிறவர்கள், அதற்குத் துணைபோகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தமிழ்நாட்டில்தான் எடுக்கப்பட்டுவருகிறது.
சிசுக்கொலை எங்கு நடந்தாலும் மாவட்ட ஆட்சியரின் கீழ் மகப்பேறு மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், வழக்கறிஞர்கள் உட்பட குழுவாக இயங்கக்கூடிய அட்வைஸரி கமிட்டி உள்ளது.
அந்தக் குழுவிடம் நாம் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரின் பெயர், விவரங்கள் ரகசியம் காக்கப்படும். ஆணா? பெண்ணா? என ஸ்கேன் செய்து அறிந்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.
30 வருடங்களுக்கு மேல் நடைமுறையில் உள்ள இந்த சட்டத்திற்கே சவால் விட்டிருக்கிறது, அந்த இளைஞனின் வீடியோ.

பெண்கள் முழுமையான சுதந்திரத்துடன், முன்னேறினால்தான் இந்த சமுதாயம் முன்னேற்றத்தை அடையும்.
சமூகமும் மாறும்போது இந்தச் சட்டம் தேவைப்படாது. ஆனால், இன்றைய சூழலுக்கு இந்த சட்டம் அவசியமானது.
என்னதான், பாலின தேர்வு குறித்துத் தனிப்பட்ட கருத்துகள் இருந்தாலும் அந்த நாட்டின் சட்டத்தை மதிக்கவேண்டும்.
இப்படி, பிரபலம் ஆகவேண்டும் என நினைத்துக்கொண்டு போகிற போக்கில் சமூகத்துக்கு எதிரான விஷம கருத்துக்களைப் பரப்பக்கூடாது” எனக் கடுமையாக எச்சரித்தார்.