• October 2, 2025
  • NewsEditor
  • 0

`காந்தாரா’ படத்தின் அடுத்த பாகமாக வந்திருக்கும் இந்த `காந்தாரா சாப்டர் 1′, முதல் பாகத்தின் முந்தைய பிளாஷ்பேக் கதையைச் சொல்கிறது. முதல் பாகத்தைப் போலவே இதையும் எழுதி, இயக்கி, நடித்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி.

முந்தைய பாகத்தில் சிவாவும் (ரிஷப் ஷெட்டி) அவருடைய தந்தையும் பூதகோலா திருவிழாவின்போது மாயமான இடத்தின் கதையைச் சொல்வதாகத் தொடங்குகிறது படம். ஈஸ்வர பூந்தோட்டமான காந்தாரா வனத்தில் நாயகன் பெர்மே (ரிஷப் ஷெட்டி) தனது மக்களுடன் வசித்து வருகிறார். ஈஸ்வர பூந்தோட்டத்தை அடைய நினைக்கும் சூழ்ச்சிக்காரர்களைத் தடுக்கும் காவல்காரராகவும் அவர் இருக்கிறார்.

Kantara Chapter 1 Review

அந்த இடத்தில் பெரும் இயற்கை வளம் இருப்பதை அறிந்து, வனத்திற்குள் வசிக்கும் ஓர் இனமும், பாங்கரா மன்னர் சாம்ராஜ்ஜியமும் அதை அடைய நினைக்கிறது. பல சூழ்ச்சி வேலைகளைச் செய்து ஈஸ்வர பூந்தோட்டத்தை அடைய நினைக்கும் ஏமாற்றுக்காரர்களை அழித்தொழித்து, எப்படி காந்தாரா மக்கள் அந்த இடத்தைப் பாதுகாக்கிறார்கள் என்பதுதான் இந்த பேன் இந்தியா சினிமாவின் கதை.

மக்களின் நலனுக்காகத் திடகாத்திரமான உடல்மொழியில் அனைத்தையும் எதிர்கொள்பவராகவும், மக்களைப் பாதுகாக்கத் தீயவர்களைப் போரிட்டு துவம்சம் செய்பவராகவும், நாயகன் ரிஷப் ஷெட்டி நடிப்பில் ‘சிவதாண்டவம்’ ஆடியிருக்கிறார். அதுவும் ஓங்காரமாக சாமி ஆடும் காட்சிகளில், தன் முகபாவனைகளாலும், எனர்ஜியாலும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறார்.

பொறுப்பற்று இருக்கும் பாங்கரா அரசனாக வரும் குலசேகரா கதாபாத்திரத்தில் நடிகர் குல்ஷன் தேவையா, பார்வையாளர்களுக்குக் கோபத்தையும் வெறுப்பையும் உண்டாக்கி, கதாபாத்திரத்திற்கு அத்தனை நியாயம் சேர்த்திருக்கிறார். அட்டகாசமான அலட்டல் உருட்டல் நடிப்பு!

Kantara Chapter 1 Review
Kantara Chapter 1 Review

இளவரசி கனகவதியாக நடிப்பில் அடுத்த லெவலைத் தொட்டு நம்மை வசீகரிக்கிறார் நாயகி ருக்மிணி வசந்த். ஆனால், க்ளைமாக்ஸ் காட்சிகளில் வாள் தூக்கி, விரிந்த கண்களுடன் போரிடும் காட்சிகளில் மிகைத் தன்மை அவரிடம் எட்டிப் பார்க்கிறது.

வஞ்சகம் செய்யும் எண்ணமிருந்தாலும், சாம்ராஜ்ஜியத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் பொறுமையைக் கடைப்பிடிக்கும் ராஜசேகர் கதாபாத்திரத்தில் ஜெயராம், அனுபவ நடிப்பால் நம் மனதில் இடம்பிடிக்கிறார்.

இவர்களைத் தாண்டி, பிரமோத் ஷெட்டி, பிரகாஷ் துமினாட், ராகேஷ் பூஜாரி ஆகியோர் கிச்சு கிச்சு எபிசோடுக்குப் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள்.

வளம் மிகுந்த காந்தாராவின் வனம், வெண்மேகங்கள் மூடிய மலைகள் என இயற்கையை அதன் தன்மை மாறாமல் படம்பிடித்து இனிமையான அனுபவத்தைத் தருகிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ். காஷ்யப்.

பாங்கரா சாம்ராஜ்ஜியத்தின் பிரமாண்டம், போர்க்களத்தில் சுழன்று அடிக்கும் சண்டைக் காட்சிகள் என, அனைத்திற்கும் அசாத்திய உழைப்பைத் தந்து பார்வையாளர்களுக்கு விஷுவல்களில் முழுமையான அனுபவத்தைத் தருகிறார். சிங்கிள் ஷாட் போலவே தைக்கப்பட்டிருக்கும் சில சண்டைக் காட்சிகள், மிரட்டலான தேர் ஊர்வலம், குதிரை ஓட்டம், நாயகன் சாமியாடும் காட்சிகள், க்ளைமாக்ஸ் போர்க் காட்சிகள் எனக் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்குப் பல ஹைலைட்டான காட்சிகள் படத்தில் உண்டு!

பாங்கரா எல்லைக் கதவுகள், அரண்மனைகள், போர்க் கருவிகள் எனக் கண்கவர் விஷுவல்களுக்குப் பெரும் விருந்தளித்து, தனித்து நிற்கிறார் கலை இயக்குநர்.

Kantara Chapter 1 Review
Kantara Chapter 1 Review

காமெடி, ஆக்ஷன் என முதற்பாதியை நிதானமாகக் கோர்த்திருந்தாலும், இரண்டாம் பாதியைத் தனது கத்திரி கருவியால் செழுமைப்படுத்தித் தூக்கி நிறுத்துகிறார் படத்தொகுப்பாளர் சுரேஷ் மல்லையா. தொடக்கக் காட்சிகளில் மட்டும் கூடுதல் தெளிவு இருந்திருக்கலாம்.

கதையோடு வரும் பாடல்களை ரசிக்கும்படி கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் அஜ்னீஷ் பி. லோக்நாத், படத்தின் பின்னணி இசையில் ஆடியிருப்பது ருத்ரதாண்டவம்! மக்களுக்குத் துயரம் நேர்கையிலும், அதை எதிர்த்துக் களமிறங்கும் நேரத்திலும், தனது இசையால் காட்சியின் வீரியத்தை அதிகப்படுத்தியிருக்கிறார். முதல் பாகம் மேஜிக் என்றால், இந்த இரண்டாம் பாகத்தில் அவர் காட்டியிருப்பது மும்மடங்கு மேஜிக்.

புலி, அரக்கன், நெருப்பு எஃபெக்ட்ஸ் என கிராபிக்ஸ் தரத்திலும் புதியதொரு உச்சத்தைத் தொட்டிருக்கிறது ‘காந்தாரா’. ஆடை வடிவமைப்பு, ஒப்பனை என இதர தொழில்நுட்ப கலைகளிலும் படக்குழுவினரின் பேருழைப்பு தெரிகிறது.

ரிஷப் ஷெட்டிக்கு தமிழ் டப் செய்திருக்கும் நடிகர் மணிகண்டனும் குரல் தொனியில் தேவையான மீட்டரைக் கணித்து எட்டிப் பிடித்திருப்பது சிறப்பு! தொடக்கக் காட்சிகளில், தமிழ் டப் வெர்ஷனில் ஒலிக்கலவையில் மட்டும் சின்ன பிரச்னைகள் தென்படுகிறது. அதேபோல, துளு மொழியில் வரும் காட்சிகளில் தமிழ் சப்டைட்டிலில் அத்தனை பிழைகள் இருப்பதைக் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

காமெடி, டிராமா எனப் பொறுமையாகவே கதையின் மோதல் புள்ளியை எட்டுகிறது படம். சில காமெடிகள் நம்மைச் சோதித்தாலும், பெரும்பாலான டைமிங் ஒன்-லைனர்கள் (பிறரின் உருவத்தைக் காட்டி கேலி செய்வதைத் தவிர்த்திருக்கலாம்) முதற்பாதிக்குக் கைகொடுத்திருக்கின்றன.

பஞ்சுருளி தெய்வத்தின் பின்கதை, கடம்பா சாம்ராஜ்ஜியம் எனக் கற்பனை கலந்த வரலாற்றுக் கதைகளை அடுத்தடுத்து சரியான மீட்டரில் கோர்த்து, எழுத்தாளராகவும் கவனம் ஈர்க்கிறார் ரிஷப் ஷெட்டி.

தெய்வீகத் தன்மை, ஆக்ஷன் என அத்தனையும் ஓவர்டோஸ் ஆகாமல் கவனித்துக் கொண்டதும் எழுத்தின் முதிர்ச்சி.

ஒவ்வொரு விஷயத்திற்கும் திரைக்கதையில் முன்பே லீட் கொடுத்து, பின்பு அதற்கு நியாயம் சேர்க்கும் காட்சிகளை அமைத்தது என, அவ்வளவு ஆழத்தையும் நுணுக்கத்தைக் கையாண்ட ரிஷப் ஷெட்டிக்கு மெடல் கொடுக்கலாம்.

Kantara Chapter 1 Review
Kantara Chapter 1 Review

பழங்குடியின மக்களின் உழைப்பைச் சுரண்டி, அவர்களின் வளத்தையும் பிடுங்கிக் கொள்ள நினைத்த மன்னர்களின் வரலாற்றையும் விமர்சிக்கும் இடத்தில் `காந்தாரா’ தனித்து நிற்கிறது.

தெய்வ வாக்கிற்கு மரியாதை தந்து, பாங்கராவுக்குத் தங்களின் தெய்வத்தைக் காந்தாரா மக்கள் கொடுக்கிறார்கள். பின்பு, அவர்களின் கனவுகளிலேயே ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என அதே தெய்வம் உணர்த்தும் லாஜிக் மட்டும் பெரும் குழப்பத்தைத் தருகிறது, ரிஷப்! க்ளைமாக்ஸ் காட்சியில் ஓங்கி ஒலிக்கும் சினிமாத்தனத்தையும், கூர்மையான வாள்களைக் கொண்டு சரி செய்திருக்கலாம். அதேபோல, நாட்டார் தெய்வங்களையும், அவர்களின் வரலாற்றையும் முன்னிலைப்படுத்தி உருவான முதல் பாதிக்கு நேர் எதிராக, பெருந்தெய்வங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, கடவுள் vs அசுரன் கோட்பாட்டில் க்ளைமாக்ஸைக் கொண்டு சென்றது இதை மற்றுமொரு கமெர்ஷியல் படமாக மாற்றிவிடுகிறது.

குறைகள் இருப்பினும், தொழில்நுட்ப ரீதியாகப் பிரமாண்டத்தையும், எழுத்தில் நேர்த்தியையும் காட்டி, முழுமையான திரையரங்க அனுபவத்தைத் தரும் `காந்தாரா’, சாண்டில்வுட்டின் புதியதொரு மைல்கல்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *