• October 2, 2025
  • NewsEditor
  • 0

அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட அரசாங்க நிதி ஒதுக்கீடு மசோதா தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால், அமெரிக்காவின் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது.

இதனால் வேலையிழப்புகள், பல்வேறு அரசு நிர்வாகங்கள் முடக்கம், சம்பளம் எதுவும் இல்லை என்பது போன்ற பல பிரச்னைகளை அமெரிக்கா சந்திக்க உள்ளது.

இந்த அரசு முடக்கம் குறித்து நமக்கு விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.

“அமெரிக்க ஃபெடரல் அரசு முடக்கம் என்பது புதிதல்ல. நேற்று முன்தினம் நடந்த முடக்கத்துடன், இதுவரை அமெரிக்காவில் 21 முறை ஃபெடரல் அரசு முடங்கியுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றம்

அமெரிக்க அரசு முடக்கம் எதனால் ஏற்படுகிறது?

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள், அடுத்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும். நம்மூரில் ‘பட்ஜெட்’ என்று கூறப்படுவது தான், அங்கே நிதி ஒதுக்கீடு மசோதா என்ற கூறப்படுகிறது.

இந்த மசோதாவிற்கு அமெரிக்க சென்ட்டில் ஒப்புதல் கிடைத்தால் தான், அக்டோபர் 1-ம் தேதி முதல், அரசு நிர்வாகங்களுக்கு நிதி கிடைக்க தொடங்கும்.

அவர்களது சட்டப்படி, இப்போது இந்த மசோதா தோல்வியுற்றுள்ளது. இதனால், அரசு நிர்வாகம் நடப்பதற்கான பட்ஜெட் அவர்களிடம் இருக்காது. அதனால், அரசாங்கம் முடங்கிவிட்டது.

ஏன் இது பிரச்னை?

அமெரிக்க அரசு நிதி ஒதுக்கீடு சட்டத்தின் படி, இந்த மசோதாவிற்கு அமெரிக்க அதிபரின் ஒப்புதல் மட்டுமின்றி, செனட் மற்றும் காங்கிரஸ் ஒப்புதலும் தேவை.

அமெரிக்காவில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி என்று இரு கட்சிகள் தான் உள்ளன.

இப்போது இருக்கும் செனட்டில் 53 குடியரசு கட்சியினரும், 45 ஜனநாயக கட்சியினரும், 2 சுயேச்சை கட்சியினரும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

செனட்டில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட போது, அதற்கு போதுமான வாக்குகள் கிடைக்கவில்லை. அதனால் தான், அந்த மசோதா தோல்வியுற்று அரசு முடக்கம் ஏற்பட்டுள்ளது.

மசோதா தோல்வியுற்ற நிலையில், ‘தொடர் தீர்மானம்’ (Continuing Resolution) நிறைவேற்றப்பட்டிருக்கலாம். அதாவது, புதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல், கடந்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடே இந்த ஆண்டும் தொடர்வது ஆகும். ஆனால், இதுவும் இந்தச் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவேற்றப்படவில்லை.

அதனால் தான், ஃபெடரல் அரசாங்கம் முடக்கம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க டாலர்கள்
அமெரிக்க டாலர்கள்

என்ன நடக்கும்?

ஃபெடரல் அரசாங்கம் முடக்கம் என்றால் அரசிற்கு கீழ் செயல்படும் நிர்வாகங்கள் முடங்கி உள்ளன என்று பொருள். அவை எதுவும் செயல்படாது.

போலீஸ், விமான நிலையம், அமெரிக்க போஸ்டல் சர்வீஸ் போன்ற அத்தியாவசிய நிர்வாகங்கள் மட்டும் இந்த முடக்கத்திற்கு விதிவிலக்கு.

இதுவரை அரசு தொழிற்சாலைகளுக்கும், மாணவர்களின் படிப்பிற்கும் வழங்கப்பட்டு வந்த நிதி ஆகியவை நிறுத்தப்படும்.

இந்த முடக்கம் எப்போது முடியும்?

அதற்கான கால அளவுகள் எதுவும் இல்லை.

ஒருவேளை, தொடர் தீர்மானம் கூட நிறைவேற்றப்படலாம்.

ஆனால், எதுவாக இருந்தாலும், செனட்டின் ஒப்புதல் வேண்டும்.

இப்போது ஏன் இந்த முடக்கம்?

வெளிநாடுகளுக்கு வழங்க கூடிய நிதி, அமெரிக்காவின் அமைதிப்படைக்கான நிதி என பல மிகப்பெரிய துறைகளுக்கான நிதியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறைத்துள்ளார்.

மருத்துவத் துறையில் எப்போதும் ஜனநாயக கட்சி தனி கவனம் செலுத்தும். இது அவர்களுடைய மிகப்பெரிய ப்ளஸ். ஆனால், குடியரசு கட்சியை சேர்ந்த ட்ரம்ப் இதற்கான நிதியை தற்போது குறைத்துள்ளார்.

இதெல்லாம் ஜனநாயக கட்சியின் அதிருப்திகள்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

என்ன ஆகும்?

இந்த முடக்கத்தினால் பல அரசு பணியாளர்கள் வேலையில் இருந்து அனுப்பப்படுவர். பலருக்கு பகுதி நேர பணி வழங்கப்படும். பணியில் இருப்பவர்களுக்கு சம்பளமும் கிடைக்காது.

2018-ம் ஆண்டு, ட்ரம்ப் முதல்முறை அதிபராக பொறுப்பேற்ற போதும் இந்த முடக்கம் ஏற்பட்டது. அது 35 நாள்களுக்கு நீண்டது. இதனால், அப்போது 11 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது. இது அமெரிக்க உள்நாட்டு உற்பத்தி திறனுக்கு மிகப்பெரிய அடி. இது ஒரு எடுத்துகாட்டு.

மீண்டும் அரசு நிர்வாகம் செயல்பட தொடங்கும்போது, இப்போது பணியில் இருக்கும் சிலருக்கு சம்பளம் கிடைக்கலாம்… கிடைக்காமலும் போகலாம். அது சட்டத்திற்கு உட்பட்டது தான்.

மேலும், பலருக்கு வேலைகள் போகும். இதை ட்ரம்ப் நல்லது என்றே கருதுகிறார். இதனால், பலரை வேலையில் இருந்து தூக்கலாம் என்று கூறுகிறார். அவர் இதை பாசிட்டிவாகவே பார்க்கிறார்.

இந்தியாவை எப்படி பாதிக்கும்?

நேற்று இந்தியாவின் பங்குச்சந்தை பாசிட்டிவாகவே இருந்தது. அங்கு முடங்கியதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை இந்தியாவிற்கு திருப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *