கடந்த சனிக்கிழமை, கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அங்கே கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஆய்வு செய்ய ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட எம்.பி குழு ஒன்றை அமைத்தார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா.
இந்தக் குழு கரூரில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 30) ஆய்வை மேற்கொண்டது.
.jpeg)
இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்தார் வி.சி.க தலைவர் திருமாவளவன்.
அவர், “கூட்டணிக்கு வேண்டாம். வெளியில் இருந்தே திமுகவிற்கு எதிரான தீவிர வெறுப்பைப் பரப்புங்கள். இது தான் பாஜக பலருக்கு கொடுத்திருக்கும் செயல்திட்டம்.
அனைவரையுமே கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று பாஜக நினைக்கவில்லை. இந்தத் தேர்தலில் விஜயைக் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பது அதிமுகவின் நோக்கமும் இல்லை… பாஜக நோக்கமும் இல்லை.
அதிமுக – பாஜக முயற்சிக்காது
‘அவரை வைத்து திமுக தலைமையிலான கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும். இந்தக் கூட்டணி ஆட்சிக்கு வராமல் தடுத்துவிட வேண்டும். சிறுபான்மை சமூதாயத்தினரின் பெரும்பான்மையான வாக்குகளை சிதறடிக்க வேண்டும்’ – இது தான் அவர்களின் ஒரே செயல்திட்டம். அதனால், தவெகவை அதிமுக – பாஜக கூட்டணயில் சேர்க்க ஒருபோதும் முயற்சிக்கமாட்டார்கள்.
அவர்கள் திமுக, திமுக அரசு, திமுக கூட்டணி மீதான தாக்குதல்களுக்கு துணையாக நிற்பார்கள்.
மணிப்பூருக்கு செல்லவில்லை
மணிப்பூரில் நாள்தோறும் உயிரிழப்புகள் நடந்துகொண்டு இருக்கின்றன. அது குறித்து பிரதமர் கவலைப்படவில்லை. நாடாளுமன்றத்திலும் பேசவில்லை. அது குறித்து பேசவும் அனுமதிக்கவில்லை. எந்த நாடாளுமன்ற குழுவையும் அங்கே அனுப்பவில்லை.
ஆனால், இந்தப் பிரச்னையில் மட்டும் நிர்மலா சீதாராமன், எல்.முருகன், ஹேமமாலினி தலைமையிலான 8 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஓடோடி வருகிறது.
காவல்துறை, தமிழ்நாடு அரசு முறையாக இயங்கவில்லை என்று குற்றம் சாட்ட முயலுகிறது. ஆனால், அவர்களுக்கு 41 பேர் இறந்தது பிரச்னையாக இல்லை.
இதை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய வேண்டும் என்பது தான் அவர்களது நோக்கமாக இருக்கிறது.

விஜய்யின் ஆபத்தான அரசியல்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதை விட, இதை வைத்து எப்படி அரசியல் ஆதாயம் தேடலாம் என்று தான் விஜய்யும் குறியாக இருக்கிறார். இதை பார்க்கும்போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இதற்காக அவர் துளியும் வருத்தப்படுவதாக தெரியவில்லை. அவருக்கு குற்ற உணர்வு இல்லை.
இதில் அவர் ஆட்சியாளர்கள் மீது பழி போட முயற்சிக்கிறார் என்றால், அவர் எவ்வளவு ஆபத்தான அரசியலைக் கையிலெடுத்து இருக்கிறார்? அல்லது எவ்வளவு ஆபத்தானவர்களின் கையில் சிக்கி இருக்கிறார் என்பது பெரும் கவலையளிக்கிறது.
இது மாதிரியான சக்திகளிடம் தமிழ்நாடு சிக்கிக்கொண்டால், தமிழ்நாடு எதிர்காலம் என்ன ஆகும் என்று அச்சம் எழுகிறது.
விஜய் மீது ஏன் வழக்கு பதியவில்லை?
இந்தச் சம்பவத்தில் தமிழ்நாடு காவல்துறை காட்டுகிற மெத்தனம் அதிர்ச்சி அளிக்கிறது. இதில் ஏன் விஜய் மீது வழக்கு பதியவில்லை.
புஸ்ஸி ஆனந்த் மீது வழக்கு பதிய இருக்கும் முகாந்திரம், விஜய் மீது இல்லையா?
புஸ்ஸி ஆனந்த் உடன் இருக்கிறவர்கள் மீது வழக்கு தொடுக்கும்போது, அருண் ராஜ் மீது ஏன் வழக்கு பதியப்படவில்லை? ஏன் ஆதவ் அர்ஜூனா மீது வழக்கு பதியவில்லை.
தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு காவல்துறை அச்சப்படுகிறதா? வலுத்தவர்கள் மீது வழக்கு போடுவதில்லை… இளைத்தவர்கள் மீது வழக்கு போடுவது என்கிற நடைமுறையை கையாளுகிறதா?
‘பாஜக கொள்கை எதிரி’ என்று விஜய் சொல்லும்போது, ஏன் பாஜக வந்து விஜய்க்கு முட்டுக்கொடுக்கிறது. இது அவர்களது திட்டம் தான்.
கடந்த 25 ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்ற முடியவில்லை. இரண்டு பெரிய தலைவர்கள் இல்லாத நிலையில், எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். விசிக இருக்கும் வரை, இந்த சூதும், சூழ்ச்சியும் நடக்காது.” என்றார்.