
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் 100-வது ஆண்டு கொண்டாட்டம் நடந்தது.
அமெரிக்காவின் 50 சதவிகித வரி
அந்தக் கொண்டாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவிகித வரி பிளஸ் 25 சதவிகித கூடுதல் வரி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
“அமெரிக்காவின் புதிய வரிகள் அவர்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது மற்ற அனைவரையும் பாதித்துள்ளது.
ஒருவர் மற்றொருவரை சார்ந்தே இந்த உலகம் இயங்கி வருகிறது. எந்த நாடும் தனியாக இயங்க முடியாது. ஆனால், இந்தச் சார்பு கட்டாயமாக்கப்படக் கூடாது.
நாம் சுதேசியை சார்ந்து, நமது தற்சார்பில் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், நட்பு நாடுகளிடம் நல்ல உறவைப் பேண வேண்டும். ஆனால், அது கட்டாயமாக இல்லாமல், நமது விருப்பத்துடனானதாக இருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.
நேபாள போராட்டம்
சமீபத்தில் நேபாளத்தில் நடந்த போராட்டம் குறித்து, ‘ஒரு பக்கத்து நாடு நிலையற்றத் தன்மையோடு இருப்பது நல்லதல்ல.
இலங்கை, வங்கதேசம் மற்றும் சமீபத்தில் நேபாளம் என பக்கத்து நாடுகளில் மக்களின் கோபத்தால் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை நாம் நிச்சயம் கவனிக்க வேண்டும்.
இந்த மாதிரியான பிரச்னையை பாரதத்தில் கிளப்ப நினைக்கும் படைகள் இங்கே நாட்டிற்குள்ளும், நாட்டிற்கு வெளியேயும் உள்ளன.
வன்முறை எதையும் கொண்டு வராது. அது அராஜகத்திற்கே வழிவகுக்கும். நாட்டில் உள்ள அமைதியின்மை வெளிநாட்டு சக்திகளுக்கு உள்நாட்டிற்கு தலையிடுவதற்கான வாய்ப்புகளைக் கொடுக்கும்” என்று பேசியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர்
கடந்த மே மாதம் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் குறித்து, “இந்திய அரசு திட்டமிட்டு, மே மாதம் வலுவான பதிலடியை தந்துள்ளது.
நம் நாட்டின் வலுவான தலைமை, வீரமான படைகளைத் தாண்டி, அந்த நேரத்தில், சமூதாயத்தின் பலத்தையும், ஒற்றுமையையும் பார்த்தது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.