
தென் இந்தியாவில் தசரா என்றால் இரண்டு ஊர்கள்தான் நினைவுக்கு வரும். ஒன்று மைசூர், மற்றொன்று தமிழகத்தின் குலசேகரப்பட்டினம். அதிலும் குலசை என்று போற்றப்படும் குலசேகரப்பட்டினம் உலகப்புகழ்பெற்றது. காரணம், லட்சக்கணக்கான எளிய மக்கள் இந்த விழாவில் கலந்துகொள்வதோடு கண்ணைக்கவரும் வேஷங்களை தரித்துவந்து வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். வாருங்கள், அந்த அற்புதத்தலத்தின் மகிமைகளையும் தலவரலாற்றையும் தெரிந்துகொள்வோம்.
திருச்செந்தூரில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ளது குலசேகரப்பட்டினம். இங்குதான் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள சுவாமிக்கு ஞானமூர்த்தி என்று பெயர். இத்தலத்தின் விருட்சம் வேப்பமரம். தீர்த்தம் வங்கக்கடல்.
தலபுராணம்
மகிஷாசுரனை அம்பாள் வதம் செய்தாள். அதனால் அவளுக்கு தோஷம் உண்டானது. அந்த தோஷம் நீங்கிட, சிவபெருமானை தியானித்துத் தவம் செய்ய இத்தலத்துக்கு வந்தாள். அம்பிகையின் தவத்துக்கு இறங்கி சிவபெருமான் ஞானமூர்த்தீஸ்வரராக தரிசனம் கொடுத்து அருள்பாலித்தார் என்கிறது தலபுராணம்.
அம்பாள் தவம் இருந்த இடத்தில் கால ஓட்டத்தில் புற்றும், அதன் மேலாக ஒரு உடைமரமும் வளர்ந்து நின்றன. பின்னாளில், ஆங்கிலேயர்கள் கன்னியாகுமரிக்குப் புறவழிச்சாலை அமைக்க குலசேகரப்பட்டினத்தில் தேர்வு செய்திருந்த இடத்தில் இந்தப் புற்றும் மரமும் தடையாக இருக்கவே, மரத்தை வெட்ட முடிவெடுத்தனர்.
அப்படி மரத்தை வெட்டியபோது, ரத்தம் பெருக்கெடுத்தது. சுற்றியிருந்தவர்கள் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர். அப்போது, அங்கிருந்தவர்களில் ஒருவர் மரத்தின் அடிப்பகுதியை மற்றவர்களுக்குச் சுட்டிக் காட்டினார். அங்கே இறைவனின் முகமும், இறைவியின் முகமும் காணப்பட்டது. எனவே மக்கள் அந்தப் புற்றையே இறைவியாக பாவித்து வழிபடத் தொடங்கிவிட்டனர்.
ஒருநாள், அம்பாள் உபாசகரான மயிலாடி சுப்பையா ஸ்தபதி கனவில் தோன்றிய அம்பாள், பஞ்சலிங்கபுரம் மலையில் இருந்து கல் எடுத்து, கொட்டாரம் என்ற இடத்தில் வைத்து, சுவாமி மற்றும் அம்பாள் சிலைகளைச் செய்யுமாறு உத்தரவு கொடுத்தாள். எந்த ஊருக்கு என்று அந்த ஸ்தபதிக்குத் தெரியாது.

இந்த நிலையில் குலசையில் புற்றின் மேலாக ஞானமூர்த்தீஸ்வரர், முத்தாரம்மன் சிலைகளை பிரதிஷ்டை செய்ய விரும்பிய மக்கள், மயிலாடி சுப்பையா ஸ்தபதியிடம் சென்றார்கள். அவர்களைப் பார்த்ததுமே அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, ‘உங்கள் ஊருக்கான சிலைகள் தயாராக இருக்கின்றன. எடுத்துச் செல்லுங்கள்’ என்று கூறிவிட்டார். இன்று குலசை கோயிலில் தரிசிக்கும் முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரர் திருவுருவங்களே அவை.
தசரா விழா
இன்றைக்கு பல லட்சம் பக்தர்கள் கூடும் விழாவாக தசராவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. லட்சோபலட்சம் மக்கள் வேண்டுதல் விரதம் இருந்து, வேஷம் கட்டி, காணிக்கை வசூலித்து குலசைக்கு வருவார்கள். அம்பாளுக்குக் காணிக்கையை நேர்ச்சையை செலுத்தி வழிபட்டுச் செல்வார்கள்.
கல்யாண வரம், பிள்ளைப் பேறு, பிணிகள் நீங்கிட, கடன்கள் அகன்றிட, வழக்குகளில் வெற்றிபெற… இப்படி தங்களின் பிரச்னையை முத்தாரம்மனிடம் வேண்டுதலாய் வைப்பார்கள். வேண்டுதல் பலித்து, விட்டால், தங்கள் மனதில் என்ன வேஷம் கட்ட வேண்டும் என்று தோன்றுகிறதோ அந்த வேஷத்தில் தொடர்ந்து மூன்று வருஷம் தசரா அன்று அம்பிகையை வந்து தரிசித்து வணங்குவார்கள்.
மூன்று வருஷத்துக்குப் பிறகும் வேஷம் கட்டிக்கொண்டு வர விரும்பினால், அம்பாள் சந்நிதியில் பூப்போட்டு உத்தரவு கிடைத்த பிறகுதான், என்ன வேஷம் வருகிறதோ அந்த வேஷத்தில் அம்பாளை தரிசிக்க வரலாம்.

அதிலும் குறிப்பாக, காளி வேஷம் உட்பட எந்த வேஷமாக இருந்தாலும், காப்புக் கட்டிக் கொண்டு, ஒரு தபஸ்வியைப் போலக் கட்டுப்பாடாக விரதம் இருக்க வேண்டும். சுற்றுப்புற கிராமங்களில் தசராக் குழுக்கள் அமைத்துக்கொண்டு இப்படி வேஷம் கட்டிக்கொண்டு வருவதும் உண்டு. காளி வேஷம் தரித்து வருவதற்கு 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குள் உள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை.
தல விசேஷம்
இங்கு அம்பாளுக்கு தான் சிறப்பு. எனவே, சக்திதலமாகிய மதுரைக்குரிய மந்திர, யந்திர, தந்திர முறைகள் இங்கும் பின்பற்றப்படுகிறது. தந்திரம் என்பது பூஜை முறை, மந்திரம் என்பது தேவியை துதிக்கும் தோத்திரம். யந்திரம் என்பது சாமி சிலைகள் மருந்து சாத்தி்ப் பதிக்கப்படும் போது சிலைகளுக்கு அடியில் வைக்கப்படும் செப்புத் தகடு. மதுரையில் மீனாட்சி ஆட்சி செய்வதைப்போல குலசையில் முத்தாரம்மன் ஆட்சி செய்கிறார். இவரை வணங்கி வழிபட்டால் சகலவிதமான தோஷங்களும் தீரும். வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. தசரா காலங்களில் கூட்டம் அதிகமாக இருந்தாலும் சாதாரண நாள்களில் அளவோடுதான் மக்கள் வந்து செல்வார்கள். எனவே அம்பிகை சிவனாகவே அருள்பாலிக்கும் இந்தத்தலத்துக்கு வந்து ஒருமுறை வழிபட்டுச் செல்லுங்கள். வாழ்க்கை வளமாவதைக் கண்கூடாகக் காண்பீர்கள்.