
டான் பிக்சர்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ள படம் ‘இட்லி கடை’.
இந்தப் படத்தில் தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தனுஷ் இயக்க இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் இன்று (அக்.1) திரையரங்கில் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் ‘இட்லி கடை’ குறித்து பார்த்திபன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘‘இட்லி கடை’யில் நானும் ஒரு பாத்திரமாக அதுவும் கைதட்டல் வாங்கும் ஒரு கதாபாத்திரமாக இருந்ததில் மகிழ்ச்சி.
அஹிம்சை வெல்லும் என இன்று மகாத்மா காந்தி கூட ஒரு திரைப்படம் எடுக்கத் தயங்குவார். காரணம் ரத்தம்தான் box office-ன் வண்ணமாகவே உள்ளது.
பூவிற்கு தன் வேரின் பெருமையைச் சொல்வது போல, பிள்ளைகளுக்குத் தங்கள் பெற்றோரையும் பூர்வீகத்தையும், குலதெய்வத்தையும் அடையாளப்படுத்தும் விதமாய் செய்திருப்பது மெச்சத் தகுந்தது. கண்கலங்கியது பல இடங்களில். நண்பர் இளவரசு பாத்திரமாகவே பிரகாசித்தார்.
இட்லியிலிருந்து வரும் ஆவி போல் ஜீவி இசையைச் சுடச்சுட வழங்கியிருக்கிறார். தனுஷைத் தலை மேல் வைத்துக் கொண்டாடலாம்” என்று பதிவிட்டிருக்கிறார்.