
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதையே ஒரு தொழிலாக மாற்றி, அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்தவர் டெய்லர் ஏ. ஹம்ப்ரி. இவர் தன்னை ஒரு ‘குழந்தைகளுக்கான பெயர் ஆலோசகர்’ (Baby Name Consultant) என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
குழந்தைகளுக்குப் பொருத்தமான மற்றும் தனித்துவமான பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதே இவரது தொழிலாக உள்ளது. இதற்காக இவர் 30,000 அமெரிக்க டாலர்கள் வரை கட்டணம் வசூலிக்கிறார். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.25 லட்சம் ஆகும்.
ஆர்வத்தில் தொடங்கிய தொழில்
சிறு வயதிலிருந்தே பெயர்கள் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்ததாகக் கூறும் ஹம்ப்ரி, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் இது குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து வந்துள்ளார்.
ஒருமுறை, மருத்துவமனையிலிருந்து ஒரு தாய் அவரைத் தொடர்புகொண்டு, ‘குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் கையெழுத்திட்டால்தான் மருத்துவமனையை விட்டு வெளியேற முடியும், உடனடியாக ஒரு பெயர் வேண்டும்’ என்று கேட்டுள்ளார்.
இந்தச் சம்பவமே, தனது ஆர்வத்தை ஒரு தொழிலாக மாற்றும் எண்ணத்தை ஹம்ப்ரிக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
இதுவரை 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இவர் பெயர் சூட்டியுள்ளார். இவரது சேவைகள் 200 டாலர்களில் (சுமார் ரூ.16,000) இருந்து தொடங்குகின்றன.
இந்தத் தொகையில், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப சில பெயர்ப் பட்டியல்களை மின்னஞ்சல் மூலம் அனுப்புவார். பிரத்யேக விஐபி பேக்கேஜ்களுக்குக் கட்டணம் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரை செல்கிறது.
பெற்றோரின் விருப்பங்கள் மற்றும் குடும்பப் பின்னணியை அறிந்துகொள்ள ஆன்லைன் மூலம் ஒரு கேள்வித்தாள் வழங்கப்படும். அதன் அடிப்படையில் பெயர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
பெயர்ப் பட்டியல்கள் வழங்குவதோடு, பெயர் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் தம்பதியினருக்குள் ஏற்படும் பெயர் குறித்த கருத்து வேறுபாடுகளைச் சரிசெய்வது போன்ற சேவைகளையும் இவர் வழங்குகிறார்.
அமெரிக்காவில் இந்தத் தொழில் தற்போது பிரபலமடைந்து வருவதாகவும், ஹம்ப்ரியைப் போலவே பலரும் குழந்தை பெயர் ஆலோசகர்களாகப் பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.