
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காயாம்பு கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (77). தேவகோட்டை மருத்துவமனையில் மகப்பேறு உதவியாளராக பணியாற்றி வந்த இவர், பணி ஓய்வுக்குப் பின் சாயல்குடியில் வசிக்கும் மூத்த மகள் உமா ராணி வீட்டின் மாடியில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி இரவு வழக்கம் போல் உறங்க சென்ற ராஜம்மாள் அதிகாலையில் கழுத்து மற்றும் மார்பில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கொலையாகிக் கிடந்தார்.
இந்தக் கொலை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவின் படி உதவி கண்காணிப்பாளர் குணால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளைத் தேடி வந்தனர். அப்போது ராஜம்மாளின் மகள் உமா ராணியின் செயல்பாடுகளையும் போலீஸார் கண்காணித்து வந்தனர். மேலும் அவரது செல் போனை ஆய்வுசெய்த போது அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வர பாண்டியன் (19) என்ற வாலிபருடன் உமா ராணி தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாரின் விசாரணையின் போது, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்த இந்த விஷயத்தை உமா ராணியின் தாய் ராஜம்மாள் கண்டித்துள்ளார்.

இதனால் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்ட உமா ராணியும் விக்னேஸ்வர பாண்டியனும் சேர்ந்து கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்த ராஜம்மாளின் முகத்தினை தலையணையால் அழுத்தினர். இதில் மயக்கம் அடைந்த அவரை அரிவாள் மனையால் குத்திக் கொலைசெய்ததை போலீஸாரிடம் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். வயது மீறிய முறையற்ற உறவுக்காக பெற்ற தாயை மகளே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.