
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகலாத் சர்தார். இவர் தன்னுடைய முதல் மனைவியைப் பிரிந்து, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, கணவரைப் பிரிந்து வாழும் பிங்கி என்பவருடன் குடும்பம் நடத்தி வருகிறார். பின்னர் பிழைப்பு தேடி பிரகலாத் சர்தாரும் அவரின் மனைவி பிங்கியும் சென்னை வந்தனர்.
சென்னை, சைதாப்பேட்டை, மேற்கு ஜோன்ஸ் ரோட்டில் உள்ள மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் கட்டுமான பணியில் இருவரும் ஈடுபட்டு வந்தனர். 28.09.2025-ம் தேதி இரவு பிரகலாத் சர்தாருக்கும் அவரின் மனைவி பிங்கிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதை அவர்களோடு வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள் சமாதானம் செய்து வைத்தனர். அதன்பிறகு பிரகலாத் சர்தாரும் அவரின் மனைவி பிங்கியும் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டனர். போதையிலிருந்த பிரகலாத் சர்தார், மனைவி பிங்கியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
அதோடு பிங்கியின் கழுத்தையும் அவர் நெரித்திருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த பிங்கி, காய்கறி வெட்டும் கத்தியால் பிரகலாத் சர்தாரின் கழுத்தை அறுத்ததாகக் கூறப்படுகிறது.
பிரகலாத்தின் அலறல் சத்தம் கேட்டு அந்தப்பகுதியிலிருந்தவர்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய பிரகலாத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது போதையில் விழுந்த பிரகலாத்தின் கழுத்தில் கத்தி குத்தி விட்டதாக பிங்கி கூறினார்.
அங்கு பிரகலாத்துக்கு முதலுதவி அளிக்கப்பட்டதோடு அவர் போதையிலிருப்பதால் மறுநாள் காலையில் வந்து தையல் போட்டுக் கொள்ளும்படி மருத்துவமனையிலிருந்தவர்கள் கூறியதாகத் தெரிகிறது. அதனால் பிரகலாத்தை, பிங்கி மற்றும் அவருடன் சென்றவர்கள் அழைத்து வந்தனர். அறைக்குள் படுத்திருந்த பிரகலாத் சர்தாருக்கு அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் அவரின் உடல் நிலை மோசமானது.
இந்தச் சமயத்தில் பிங்கி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அப்போது வீட்டுக்குள் சென்ற மேற்குவங்காளத்தைச் சேர்ந்த பப்லு குமார் ஜனா, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பிரகலாத் சர்தாரிடம் விசாரித்திருக்கிறார். பேச முடியாத சூழலிலும் பிரகலாத், நான் போதையில் கீழே விழுந்ததில் கத்தி குத்தவில்லை. பிங்கிதான் என்னை கத்தியால் குத்தினார் எனக் கூறிவிட்டு மயங்கிவிட்டார்.
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பப்லு குமார் ஜனா, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு பிரகலாத்தை அழைத்துச் சென்றார். அங்கு பிரகலாத்தை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார் எனத் தெரிவித்தனர். இதையடுத்து குமரன் நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பிரகலாத்தின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பப்லு குமார் ஜனா, குமரன் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்ததோடு பிங்கி குறித்த தகவலையும் கூறினார். இதையடுத்து கணவரைக் கொலை செய்த குற்றத்துக்காக மேற்கு வங்காளம் மாநிலம் பிங்கியை போலீஸார் கைது செய்தனர். குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய காய்கறி வெட்டும் கத்தியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.