
நீலகிரி மலையில் வாழிடங்களையும் வலசைப்பாதைகளையும் இழந்து தவிக்கும் யானைகள் போக்கிடம் தெரியாமல் தடம் மாறி வருகின்றன.
உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர முடியாமல் தவிக்கும் யானைகளை பெருந்தோட்டக் குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களும் அப்பாவிப் பழங்குடிகளும் எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனால், கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மனித உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொக்காபுரம், தொட்ட லிங்கி பகுதியைச் சேர்ந்த புட்டமாதன் என்பவர் வழக்கமான ஒற்றையடிப் பாதையில் நேற்று காலை நடந்து செல்கையில் திடீரென யானை ஒன்று எதிர்ப்பட்டு தாக்கியிருக்கிறது.
படுகாயமடைந்த அவரை மீட்ட உள்ளூர் மக்கள், மசினகுடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கச் செய்துள்ளனர்.
உயர் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
இது குறித்து காவல்துறை மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பந்தலூர் அருகில் உள்ள நெலாக்கோட்டை பஜாரில் இருந்து குடும்பத்துடன் ராக்வுட் எஸ்டேட்டிற்கு நேற்றிரவு ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளி ராஜேஷ் என்பவரை யானை விரட்டி தாக்கியதில் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
நீலகிரி மாவட்டத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு யானை – மனித வனவிலங்கு எதிர்கொள்ளல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் நிலையில், யானைத் தாக்குதல் சம்பவங்களில் ஒரே நாளில் இரண்டு நபர்கள் உயிரிழந்திருப்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது.