
அமெரிக்காவில் செலவினங்கள் குறித்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அடுத்த நிதியாண்டிற்கான அமெரிக்க அரசின் செலவினங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், இந்த மசோதா ஒவ்வொரு ஆண்டும் நிறைவேற்றப்படுகிறது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அமெரிக்க அரசால் செலவினங்களைத் தொடர்ந்து செய்ய முடியும்.
அமெரிக்காவின் மேல்சபையான செனட் செலவினங்கள் தொடர்பான இந்த இடைக்கால நிதி மசோதாவுக்கு இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.
செனட்டில் சமீபத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இடைக்கால மசோதாவுக்கு ஆதரவாக 55 வாக்குகளும், எதிராக 45 வாக்குகளும் பதிவாகின.
அமெரிக்க செனட்டில் மொத்தம் 100 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 53 எம்பிக்களும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 45 எம்பிக்களும் உள்ளனர்.
இது போக சுயேச்சை எம்பிக்கள் இருவர் உள்ளனர். நிதி மசோதாவை நிறைவேற்ற அதற்குக் குறைந்தபட்சம் 60 வாக்குகள் தேவை.
சுயேச்சை எம்பிக்கள் குடியரசுக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் நிதி மசோதாவுக்கான ஆதரவு 55ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், ஜனநாயகக் கட்சியினர் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
இதனால் தேவையான 60 எம்பிக்கள் ஆதரவு கிடைக்காததால் நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இதனால் அமெரிக்கா முடங்கி இருக்கிறது.

அமெரிக்காவில் சரியாக நள்ளிரவு 12:01 மணிக்கு (புதன்கிழமை), அரசு முடங்கியிருக்கிறது.
விமானப் போக்குவரத்து பாதிக்கப்படும்.பொருளாதார அறிக்கைகள் வெளியிடுவது தாமதமாகும்.
மேலும் ஆராய்ச்சி மையங்கள் முதல் சிறு வணிகக் கடன் அலுவலகங்கள் வரை அனைத்தும் மூடப்படும். இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.