• October 1, 2025
  • NewsEditor
  • 0

விஜய்யின் கரூர் பிரசாரம்

கடந்த சனிக்கிழமை இரவு (செப் 27) விஜய்யின் கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலால் இதுவரை 41 பேர் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருகிறது.

கரூரில் பாஜக எம்பிக்கள் குழு

இந்நிலையில் “41 பேர் உயிரிழந்த கரூர் சம்பவத்திற்கு நீதி கிடைக்க பாஜக எம்பிக்கள் குழுவுடன் விஜய் இணைந்து செயல்பட வேண்டும்” என்று நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்.

இதுகுறித்து ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டிருக்கும் விரிவான அறிக்கையில்,

“கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக நேரில் கேட்டறிய, முழுமையாக கள ஆய்வு செய்து உண்மைகளைக் கண்டறிய தமிழகம் வந்துள்ளது எம்.பி-க்கள் குழு.

உண்மை அறியும் குழுவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்.டி.ஏ சார்பில், பாஜக எம்.பி. ஹேமமாலினி தலைமையிலான எட்டு பேர் கொண்ட குழுவில் என்.டி.ஏ. கூட்டணி எம்.பி.க்கள் உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் இந்த குழுவை சந்தித்துப் பேச வேண்டும். நீதி கிடைப்பதற்குத் துணை நிற்க வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நடந்து முடிந்த ஒட்டுமொத்த கோர சம்பவத்தின் சூத்திரதாரியாக திமுக அரசின் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இருந்தது என்பது உள்பட,

திமுக அரசின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் அரசியல் சதி உள்ளது.

உள்ளூர் அரசியல்வாதிகள் தலையிட்டுள்ளனர் என்கிற படுபயங்கரமான குற்றச்சாட்டுகள் குறித்த ஆதாரங்களை, முழுமையான தகவல் விவரங்களை அளித்து உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்கான முழு முயற்சியை நடிகர் விஜய் எடுக்க வேண்டும்.

கரூரில் பாஜக எம்பிக்கள் குழு
கரூரில் பாஜக எம்பிக்கள் குழு

இந்தக் கூட்ட நெரிசல் உயிரிழப்புச் சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம், மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை கேட்டுள்ளது.

இதேபோல, தமிழக ஆளுநர் ஆர். என். ரவியும் விரிவான அறிக்கையைக் கேட்டார்.

இதனிடையே, பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் நேற்று கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற கரூர், வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்தச் சூழ்நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தேர்தல் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க தேசிய பாஜக கூட்டணி எம்பிக்களின் உண்மை அறியும் குழு இன்று கரூர் வேலுசாமிபுரத்தில் ஆய்வு செய்ய வருகிறது.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆலோசனைப்படி 8 பேர் கொண்ட பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு ஹேமமாலினி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ்லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே, அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நடுங்க வைக்கும் கரூர்!
நடுங்க வைக்கும் கரூர்!

கரூரில் 41 பேர் உயிரிழந்த கோர சம்பவம் தொடர்பான உண்மை அறியும் தேசிய பாஜக குழுவை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் சந்திக்க வேண்டும்.

அந்தக் குழுவினருக்கு தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்தக் கோர விபத்து ஏற்பட்டபோது, என்ன நடந்தது என்பது குறித்து முழுமையாகக் களத்தில் நடந்த உண்மை நிலவரங்களை விஜய் அளிக்க வேண்டும்.

ஏனென்றால் களத்தில் அந்தக் கோர சம்பவம் நடந்த விஷயங்களை நேரில் நின்று பார்த்தவர் மற்றும் இந்த நிகழ்ச்சியின் நடுநாயகமாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக, முதல் சாட்சியாக அறியப்படுபவர் நடிகர் விஜய்.

பாஜக குழுவினர் மக்களிடம் விசாரணை நடத்தினாலும் தமிழக அரசு காவல்துறை அதிகாரிகளும் கேட்டுத் தெரிந்துகொண்டாலும் நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகக் கட்சியினர், நிர்வாகிகள் அளிக்கக்கூடிய தகவல்கள், செய்திகள், உண்மைகளைத் தெளிவாக எடுத்துக்கூறக்கூடியதாகக் கருதப்படுவதால், நடிகர் விஜய் உடனடியாக, தேசிய பாஜக கரூர் சம்பவம் உண்மை அறியும் குழுவினரைத் தன்னுடைய நிர்வாகிகளுடன் சந்தித்து இது சம்பந்தமாகத் தன்னுடைய கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும்.

தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு அப்படி இல்லை. விஜய் திமுகவை எதிர்த்துத்தான் அரசியல் செய்கிறேன். திமுகவை வீழ்த்துவது என் இலட்சியம் என்று கூறி அரசியல் செய்யும்பொழுது,

இந்தக் கோர சம்பவத்தில் 41 பேர் தன்னுடைய உயிரினும் மேலான கட்சித் தொண்டர்கள், உயிருக்கு உயிரான ரசிகர்கள், ஆதரவளித்த தமிழக மக்கள் உயிரிழப்புக்குக் காரணமான சம்பவத்தில் உண்மைகளைச் சொல்ல வேண்டியதும் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டியதும் நடிகர் விஜய் அவருடைய மிக முக்கிய பொறுப்பும் தலையாயக் கடமையுமாகும்.

கரூர் விஜய் பிரசாரம்
கரூர் விஜய் பிரசாரம்

எனவே நடிகர் விஜய் அரசியலுக்கு அப்பாற்பட்டு, தேச நலனை, மக்கள் நலனை, தமிழக நலனை கருத்தில் கொண்டு, தேசிய பாஜக அமைத்துள்ள உண்மை அறியும் குழுவுடன் இணைந்து, கரூர் சம்பவத்தின் பின்னணி குறித்த விவரங்களை வெளிக்கொணர முழு முயற்சி செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *