• October 1, 2025
  • NewsEditor
  • 0

அக்டோபர் 2023 முதல் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடங்கிய போரில் இதுவரை காசாவில் 66,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 20 அம்ச அமைதித் திட்டத்தை அதிபர் ட்ரம்ப் முன்வைத்திருக்கிறார்.

அந்தத் திட்டத்தில் காசாவில் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துதல், மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்தல் மற்றும் இஸ்ரேலிய படைகளை திரும்பப் பெறுதல் ஆகியவை அடங்கும்.

Israel-Hamas war

மேலும், ஹமாஸ் தனது ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்றும், காசாவை எந்த வடிவத்திலும் ஹமாஸ் ஆட்சி செய்ய அனுமதிக்கப்படாது என்றும் அந்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதற்குப் பதிலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலால் விடுவிக்கப்படுவார்கள்.

பட்டினி மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள காசாவிற்கு முழு உதவியும் உடனடியாக அனுப்பப்படும் என்ற வாக்குறுதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக பேசிய ஹமாஸ், வழங்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள் குறித்து குழுவிற்குள்ளும் மற்ற பாலஸ்தீன பிரிவுகளுடனும் விவாதிப்பதாகக் கூறியது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டு வரவேற்றுள்ளார்.

இஸ்ரேலுடன் சேர்ந்து, பிரான்ஸ், கனடா, இந்தியா, ரஷ்யா போன்ற பல நாடுகள் காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டத்தை ஆதரித்து வரவேற்றுள்ளன.

இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “எனது திட்டத்தை பாலஸ்தீன போராளிக் குழு ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்.

டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்

நான் முன்மொழிந்துள்ள திட்டத்தில் அனைத்து அரபு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. முஸ்லிம் நாடுகள் அனைத்தும் கையெழுத்திட்டுள்ளன. இஸ்ரேலும் கையெழுத்திட்டுள்ளது.

நாங்கள் ஹமாஸின் முடிவுக்காக காத்திருக்கிறோம். ஹமாஸ் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளப்போகிறதா இல்லையா என்பது விரைவில் தெரியவரும்.

ஒருவேளை இந்த திட்டம் செயல்படவில்லை என்றால், அது மிகவும் சோகமான முடிவாக இருக்கும். எனவே, ஹமாஸ் இந்த திட்டத்திற்கு பதிலளிக்க ஹமாஸுக்கு 3-4 நாட்கள் அவகாசம் உள்ளது. இல்லையென்றால் இஸ்ரேல் செய்ய வேண்டியதைச் செய்யும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *