
புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்டத்துக்கு பிரதமர் மோடி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேல் ராணுவத்துக்கும் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் 21 அம்ச அமைதி திட்டத்தை அறிவித்தார்.
‘‘தீவிரவாதம் இல்லாத அமைதி மண்டலமாக காசா மாற்றப்படும். ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். உயிரிழந்த இஸ்ரேலியர்களின் உடல்களை ஒப்படைக்க வேண்டும். காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக வெளியேறும். பாலஸ்தீனர்களை கொண்ட குழுவின் தலைமையில் காசா இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படும். இதில் ஹமாஸுக்கு இடம் அளிக்கப்படாது’’ என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதிபர் ட்ரம்பின் போர் நிறுத்த திட்டத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்துள்ளார்.