
சென்னை: விரைவில் அனைத்து உண்மைகளும் வெளியே வரும். ‘சி.எம். சார்’ பழி வாங்க வேண்டும் என்றால் என் மீது கை வையுங்கள்; தொண்டர்களை விட்டுவிடுங்கள் என்று வீடியோ வெளியிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.
கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விஜய் மவுனமாக இருந்ததால், அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்புகளும் குவிந்தன. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் 2 நாட்களுக்குப் பிறகு கரூர் சம்பவம் தொடர்பாக நேற்று வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் பேசியிருப்பதாவது: என் வாழ்க்கையில் இதுபோன்ற வலி நிறைந்த தருணத்தை நான் எதிர்கொண்டது கிடையாது. சுற்றுப் பயணத்தில் என்னை மக்கள் பார்க்க வருவதற்கு, அவர்கள் என் மீது வைத்துள்ள அன்பும், பாசமும்தான் காரணம். அந்த அன்புக்கும், பாசத்துக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்.