
சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்து வருகிறார். கடந்த 2024-ம் ஆண்டு ராணிக்கு வரன் தேடி அவரின் பெற்றோர் திருமண தகவல் மையம் ஒன்றில் பதிவு செய்து வைத்தனர். அந்த விவரங்கள் அடிப்படையில் ராணியிடம் போனில் தொடர்புகொண்ட சூர்யா என்ற இளைஞர், திருமணம் குறித்துப் பேசியிருக்கிறார். அதன்பிறகு ராணியின் அழகை வர்ணித்த சூர்யா, ரொம்பவே ஜென்டில்மேனாக நடந்திருக்கிறார். சூர்யாவின் பேச்சு, அவரின் நடவடிக்கைகளை பார்த்த ராணியும் திருமணத்துக்கு சம்மதித்திருக்கிறார். இதையடுத்து இருவரும் மணிக்கணக்கில் போனில் பேசி வந்திருக்கிறார்கள். திடீரென ஒருநாள் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் எனக் கூறிய சூர்யா, கோயம்பேடு பகுதிக்கு வரும்படி ராணியிடம் கூறியிருக்கிறார். அதன்படி ராணியும் அங்குச் சென்றபோது அவருக்கு கிஃப்ட் ஒன்றைக் கொடுத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் சூர்யா. அதன்பிறகு அடுத்தடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் சூர்யாவைக் காதலிக்கத் தோடங்கிய ராணி அவரை முழுமையாக நம்பி அவருடன் சில இடங்களுக்குச் சென்று திருமணத்துக்கு முன்பே தனிமையிலிருந்ததாகத் தெரிகிறது.
திருமணத்துக்கு பிறகு நாம் இருவரும் சென்னையில் சொந்த வீட்டில் வாழ வேண்டும் எனக் கூறிய சூர்யா, என்னிடம் 40 லட்சம் ரூபாய் இருக்கிறது. இன்னும் பத்து லட்சம் ரூபாய் இருந்தால் கடனே வாங்காமல் ஒரு சொந்த வீட்டை வாங்கி விடலாம் என ராணியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறியிருக்கிறார். அதை உண்மையென நம்பிய ராணியும் தன்னிடமிருந்த பணம், லோன் வாங்கி ரூ.8.7 லட்சம் பணம், 7.5 சவரன் தங்க நகைகளை சூர்யாவிடம் கொடுத்திருக்கிறார். பணம் கைக்கு வந்ததும் சூர்யாவின் நடவடிக்கைகள் மாறத் தொடங்கியிருக்கின்றன. திருமணம் குறித்து ராணி பேசும்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி காலம் கடத்தி வந்திருக்கிறார். அதன்பிறகே சூர்யா, தன்னை ஏமாற்றியதை உணர்ந்த ராணி, அவரோடு சண்டை போட்டிருக்கிறார். அதோடு நகைகள், பணத்தை திரும்ப ராணி கேட்டபோது ஆத்திரமடைந்த சூர்யா, நீயும் நானும் ஹோட்டலில் தனிமையில் இருந்த வீடியோக்களை சமூக வலைதளத்திலும் உன் குடும்பத்தினருக்கும் அனுப்பி வைத்துவிடுவேன் என மிரட்டியிருக்கிறார். அதன்பிறகு சூர்யா, ராணியுடன் பேசுவதை தவிர்த்ததோடு செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து ராணி, அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அண்ணாநகர் துணை கமிஷனர் உதயகுமார் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் திருப்பதி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் லதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோஜ், அரவிந்த் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. ராணி கொடுத்த தகவலின்படி சூர்யாவை போலீஸார் தேடத் தொடங்கினர். ஆனால் சூர்யா குறித்து எந்தவித தடயமும் சிக்காததால் அவரைப் பிடிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இந்தச் சூழலில்தான் சூர்யா பயன்படுத்திய கார், நெல்லை மாவட்ட டோல்கேட் ஒன்றில் கடந்து செல்லும் சிசிடிவி காட்சி தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது. அதை வைத்து அந்தக் காரை போலீஸார் கண்டுபிடித்ததோடு சூர்யாவையும் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுறித்து அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், “கைது செய்யப்பட்ட சூர்யாவின் காரில் SPCL Secretary International Human Rights & Crime Control Council என்ற பெயரில் சிகப்பு நிற போர்டு இருந்தது. அதுகுறித்து விசாரித்தபோது இப்படி காரில் போர்டு வைத்திருந்தால் ஏரியாவில் கெத்து காட்ட முடியும். மேலும் திருமணத்துக்காக வரன் தேடுபவர்களையும் இந்த போர்டு மூலம் எளிதில் ஏமாற்ற முடியும் எனக் கூறினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கானாத்தூர் பகுதியில் ஒரு பெண்ணை ஏமாற்றிய குற்றச்சாட்டில் சூர்யா கைதானவர். இவரின் அப்பா மத்திய உளவுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதனால் காவல்துறையினரின் ஒவ்வொரு மூவ்மெண்ட்களும் சூர்யாவுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் எந்தவித தடயமும் இல்லாமல் பெண்களை ஏமாற்றி பணம், நகைகளைப் பறித்து வந்திருக்கிறார்.
சூர்யாவிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பெண்களை டார்க்கெட் செய்து ஏமாற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவரின் வலையில் வீழ்ந்தவர்களில் சிலர் குடும்ப கௌரவம் கருதி காவல் நிலையத்தில் புகாரளிப்பதில்லை. அதை தனக்கு சாதகமாக்கி கொண்ட சூர்யா, ஒவ்வொரு பெண்களிடம் ஒரு கதையைச் சொல்லி நகை, பணத்தை ஏமாற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்வதாகக் சொல்லும் சூர்யா, அதிலும் சிலரை ஏமாற்றி வந்திருக்கிறார். இவரின் பின்னணியில் யார், யார் இருக்கிறார்கள் என விசாரித்து வருகிறோம்” என்றனர்.
கைது செய்யப்பட்ட சூர்யா, போலீஸாரின் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்றபோது அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்குப்பிரிவு மாவு கட்டுடன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து பெண்களுடன் தனிமையிலிருந்து அவர்களிடமிருந்து நகை, பணத்தை மோசடி செய்து வரும் சூர்யா வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து தண்டனை வாங்கிக் கொடுக்க அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.