
சென்னை: ‘கரூர் மரணங்களை மையப்படுத்தி பாஜக நடத்தும் மலிவான அரசியலை முறியடிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், “அரசியல் களத்துக்கு புதிதாக வந்துள்ள கட்சியை சுற்றி வளைக்கும் அரசியல் சதிவலையை பாஜக விரித்திருக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் கரூர் பரப்புரை நிகழ்வில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததும், 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுமான துயரச் சம்பவம் நெஞ்சை விட்டு அகலாமல் வேதனைப்படுத்தி வருகிறது. அக்கட்சியின் தலைவரும், நிர்வாகிகளும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல், காவல் துறையின் பொதுவான கட்டுப் பாடுகளையும் மதிக்காமல் நடந்து கொண்டதே பேரபாய விளைவுக்கு காரணமாகி விட்டது.