• September 30, 2025
  • NewsEditor
  • 0

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் பங்கேற்ற பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில் விஜய் இன்று (செப் 30) மாலை வெளியிட்ட காணொளிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம். அவர் வெளியிட்ட அறிக்கையில் விஜய்யின் வீடியோ அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் தொண்டர்களைத் தூண்டிவிடும் விதமாக அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

கரூர் – தவெக

அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழக வெற்றிக் கழகம் 27ம் தேதி கரூரில் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி இதுவரை 41 அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோயுள்ளன. பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விரும்பத்தகாத நிகழ்வு நடைபெற்ற நொடியில் இருந்தே தன்னார்வத்துடன் பொதுமக்களும், மருத்துவத்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு மக்களின் மதிப்புமிக்க உயிர்களைப் பாதுகாத்துள்ளது.

மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் உள்பட அமைச்சர்களும், அதிகாரிகளும் 27ந் தேதி இரவு முதலே நேரில் கரூர் சென்று இப்பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்கள். உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நிவாரணத் தொகையும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நேரில் கரூர் சென்று தங்களது ஒருமைப்பாட்டையும், ஆறுதலையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தெரிவித்து வருகிறார்கள்.

விஜய்யின் கரூர் பிரசார நெரிசல்
விஜய்யின் கரூர் பிரசாரத்தில் நெரிசல்

ஓய்வுபெற்ற நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை துவங்கியுள்ளது. காவல்துறை மட்டத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் உட்பட பல்வேறு தரப்பினர் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். இதன் மூலம் மேலும் விபரங்கள் தெரிய வர வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இந்தக் கொடும் சம்பவம் நடைபெற்று மூன்று தினங்களுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது கட்சி நடத்திய நிகழ்வில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகளுக்கும், காயமடைந்தவர்களுக்கும் மாநில அரசும், அரசியல் கட்சிகளும், மக்களும் செய்திட்ட உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதே சரியானதாக இருக்க முடியும்.

தான் மிக மிக தாமதமாக வந்தது குறித்தோ, பரப்புரையின்போது நெரிசலில் மக்கள் சிக்கிக் கொண்டிருந்த நேரத்தில் தனது தொண்டர்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்காதது, அவர் உடனடியாக கரூரை விட்டு வெளியேறியதற்கான உரிய காரணங்களைப் பற்றியோ காணொளியில் ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை. இதற்கு மாறாக அவரது உரை என்பது முழுமையான அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது.

உயிர் இழப்புகளுக்கு வருத்தம் தெரிவிப்பதற்கு மாறாக, அரசு நிர்வாகத்தின் மீது பழி சுமத்துவதாகவே இருக்கிறது. 41 பேர் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கைக் கூட தன்னையும், தன் கட்சி தொண்டர்களையும் பழிவாங்குவதற்கான மாநில அரசின் சதி என்கிறார். தனது கட்சி தொண்டர்களைத் தூண்டி விடும் விதமாகவே அவரது உரை அமைந்துள்ளது.

இது போன்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட பொறுப்பற்ற கருத்தை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

மதிப்புமிக்க மனித உயிர்கள் பறிபோயுள்ள நிலையில் தலைமைப் பண்பையும், மனித மாண்பையும் வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் விஜய் வெளியிட்டுள்ள காணொளி எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

இத்தகைய உள்நோக்கங்கள் விஜய் அவர்களின் அரசியல் பயணம் குறித்து தமிழக மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *