• September 30, 2025
  • NewsEditor
  • 0

கரூரில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) த.வெ.க தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணப் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்து பெருந்துயரம் ஏற்பட்டது.

கடந்த இரண்டு நாள்களாக முதல்வர் ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், தவெக தரப்பிலிருந்து இன்னும் யாரும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை.

கரூர் – தவெக

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக-வின் துணை பொதுச்செலயாளரும் எம்.பி-யுமான ஆ.ராசா, “கரூரில் விஜய் கலந்துகொண்ட பிரசார நிகழ்வில் விலைமதிக்க முடியாத 41 உயிர்களை இழந்திருக்கிறோம்.

2001-ல் கலைஞர் கைதானபோது அதைக் கண்டித்து பேரணி நடந்தபோது அரசின் ஆதரவோடு வன்முறையைத் தூண்டிவிட்டார்கள். அதில் பலபேர் காயமடைந்தார், உயிரிழந்தார்கள்.

அப்போது கலைஞர் தனது உயிரையும் பொருட்படுத்தாது அதே இடத்துக்குச் சென்றார். எப்போது பதற்றம் வருகிறதோ, மக்களுக்குத் தேவை வருகிறதோ எங்களது உயிரையும் பணயம் வைத்து களத்தில் நிற்பதுதான் தி.மு.க வரலாறு. அதுபோலவே எங்களுடைய முதல்வரும் செய்திருக்கிறார்.

இதில் அரசியல் கிடையாது. ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் சில கேள்விகள் இருக்கின்றன.

களத்தில் நிற்க வேண்டிய தலைவர்கள் ஏன் கரூரில் களத்தில் நிற்கவில்லை. செய்தியறிந்த பிறகு அவசர அவசரமாக செய்தியாளர்களைச் சந்திப்பதற்குக்கூட வெட்கப்பட்டுக்கொண்டு, பயந்துகொண்டு ஏன் சென்னைக்கு வந்தீர்கள்?

இப்போது ட்வீட் போடுபவர்கள், கூட இருப்பவர்கள் எல்லாம் ஏன் களத்தில் நின்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை? ஏன் நிவாரணம் அறிவிக்கவில்லை?

நம்மால்தான் இது நடந்தது என்ற குற்ற உணர்வால்தான் அவர்கள் ஒளிந்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.

 தி.மு.க எம்.பி ஆ.ராசா
தி.மு.க எம்.பி ஆ.ராசா

அதையெல்லாம் விட முக்கியமான கொடுமை, அந்த இயக்கத்துக்கு பணம் கொடுக்கின்ற முக்கியமான இடத்தில் இருக்கின்ற ஆதவ் அர்ஜுனா ஒரு ட்வீட் போடுகிறார்.

அதில், நேபாளத்தில் நடந்ததைப் போல இங்கு ஒரு புரட்சி நடக்க வேண்டும் என்கிறார்.

அமைதியாக இருக்கின்ற, வளர்ச்சியை நோக்கி நகர்கின்ற தமிழ்நாட்டில் ஒரு புரட்சி வர வேண்டும் என்று இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு எதிரான ஒரு கருத்தைப் பதிவிட்டு, அதற்கு விமர்சனம் வந்ததும் உடனே நீக்கிவிட்டார்.

ஆதவ் அர்ஜுனா - விஜய்
ஆதவ் அர்ஜுனா – விஜய்

அந்தப் பதிவை எடுக்கின்ற அளவுக்கு தமிழ்நாட்டு மக்கள் உணர்வோடு இருக்கிறார்கள். அதற்காக தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.

ஆனால், என்னுடைய கேள்வி அந்தக் கட்சியின் தலைவர் அவரைக் கண்டித்தாரா அல்லது செய்தது தவறு என்று அறிக்கை கொடுத்திருக்கிறாரா?

எந்தவித அரசியல் புரிதலும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்வது தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் நல்லதா என்பதை நான் கேட்கிறேன்” என்று கேள்வியெழுப்பினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *