
சென்னை: சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் மைக்ரோசிப் பொருத்தும் பணி ஒரு வாரத்தில் தொடங்கப்படும் என்று மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியதும் கரூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு, அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் கூட்டத்தில் பேசிய மாநகராட்சி கவுன்சிலர்கள் பலர் நாய் தொல்லையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தினர். மைக்ரோசிப் பொருத்தும் பணியின் தற்போதைய நிலவரம் மற்றும் பயன்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.