
ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி பூக்களுக்கு கடும் கிராக்கி நிலவி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தையில் தசரா பண்டிகை மற்றும் நவராத்திரி, ஆயுத பூஜை விழா காலங்களையொட்டி பூக்கள் விற்பனை களைகட்டி உள்ளது.
பூக்களை வாங்குவதற்காக கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மலர் சந்தையில் அதிகாலை முதல் குவிய தொடங்கினர்.
இதனால் பூக்களின் விலை அதிகமாக விற்பனையானது. இன்று நிலக்கோட்டை மலர் சந்தையில் ஆயுத பூஜை விற்பனை தொடங்கியது. கடந்த வாரம் 80 இலிருந்து 100 ரூபாய் வரை விற்பனையான அரளிப்பூ இன்று 700 ரூபாய்க்கும், சிவப்பு அரளிப்பூ 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
குறிப்பாக ஆயுத பூஜை விழாவிற்கு அதிகம் பயன்படும் கதம்ப மாலைப் பூக்களுக்குக் கடும் கிராக்கி ஏற்பட்டது.

இதே போல் ரூபாய் இருபதுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கட்டு துளசி ரூ.130-க்கு விற்பனையானது. மல்லிகைப்பூ ரூ.900-க்கும், முல்லைப் பூ ரூ.500-க்கும், நாட்டுச் சம்பங்கி ரூ.350-க்கும், பட்டு ரோஜா ரூ.130-க்கும் விற்பனையானது.
பூக்கள் வரத்து இருந்தபோதிலும் பூக்களுக்கு நல்ல விலை கிடைத்திருப்பதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.