
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்
கரூரில் கடந்த 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசாரக் கூட்டத்தின்போது நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
இதனால், “விஜய்யைக் கைது செய்து தமிழக வெற்றிக் கழகத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்” என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில்,
“தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் பேரணிகள், மாநாடுகளுக்கு பணம், உணவு கொடுத்து பெரும் கூட்டத்தைத் திரட்டுகின்றன.
இதுபோன்ற கூட்டங்களில் சிறார்களும், முதியவர்களும், கர்ப்பிணிகளும் அதிக அளவில் அழைத்து வரப்படுகிறார்கள். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21-இன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.
குறிப்பாக கடந்த 27.9.2025 அன்று கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரசாரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுமார் 10 ஆயிரம் பேர் மட்டும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்ட போதிலும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் நெரிசலான இடத்தில் கூடியிருந்தனர்.
அலட்சியம், தவறான நிர்வாகம், சட்டப்பூர்வமான அனுமதியை மீறியதன் விளைவாக அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சிறார்களும், பெண்களும், அப்பாவி மக்களும் உயிரிழக்க நேரிட்டுள்ளது.
எனவே அதிகமான உயிரிழப்பு ஏற்படக் காரணமான தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
வழக்கறிஞர் செல்வகுமார் பேட்டி
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் செல்வகுமார்,
“தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 41 பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட இன்னும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தப் பிரசாரப் பொதுக்கூட்டத்தை நடிகர் விஜய் நடத்திய மோசமான சம்பவமாக நான் பார்க்கிறேன்.
இது அவர்களுக்கு முதலாவது பொதுக்கூட்டம் கிடையாது, ஏற்கெனவே இரண்டு மாநாடுகளை அவர் நடத்தியிருக்கிறார்.
இந்திய தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை
இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 09.12.2014 அன்று அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் பெண்கள், கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தவர்கள் எந்த வகையிலும் பிரச்சாரத்திற்கும் பொதுக் கூட்டங்களுக்கும் பயன்படுத்தக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தது.
ஆனால், விஜய், குழந்தைகள், பெண்களுடன் பெரும் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்.

விதிமுறைகள் முற்றிலும் புறக்கணிப்பு
மும்பை உயர்நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இதை முற்றிலும் புறக்கணித்த விஜய், அரசியல் கட்சித் தலைவருக்கு உண்டான அனுபவமோ முதிர்ச்சியோ இல்லாததுதான் இந்த உயிரிழப்பிற்குக் காரணம்.
இந்த உயிரிழப்பு தமிழகத்தில் முதலாவதாகவும் இறுதியானதாகவும் இருக்க வேண்டும் என்கின்ற நோக்கில் மேற்படி விஜய் மீது வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும். அதோடு தமிழக வெற்றிக்கழகத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.