
இந்த செப்டம்பர் மாதம் மட்டும் தங்கம் விலை 9 முறை புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது.
இந்த செப்டம்பர் மாதம், சென்னையில் தங்கம் விலை எப்படி இருந்தது என்பதைப் பார்ப்போம்.
இந்த மாதத்தின் தொடக்க நாளான செப்டம்பர் 1-ம் தேதி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.9,705 ஆகவும், பவுனுக்கு ரூ.77,640 ஆகவும் விற்பனை ஆனது.
அடுத்த இரண்டு நாள்களிலேயே (செப்டம்பர் 3), தங்கம் கிராமுக்கு ரூ.9,805 ஆகவும், ரூ.78,440 ஆகவும் விலை உயர்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டது.
செப்டம்பர் 6-ம் தேதி, தங்கம் கிராமுக்கு ரூ.10,005-ஆகவும், பவுனுக்கு ரூ.80,040 ஆகவும் விற்பனை ஆனது.
அதுவரை கிராமுக்கு ரூ.10,000-க்குள் விற்பனை ஆன தங்கம், செப்டம்பர் 6-ம் தேதி முதல் அந்த விலையைத் தாண்டி விற்பனை ஆகத் தொடங்கி உள்ளது.
செப்டம்பர் 9-ம் தேதி, தங்கம் கிராமுக்கு ரூ.10,150 ஆகவும், பவுனுக்கு ரூ.81,200 ஆகவும் விற்கப்பட்டது. இது செப்டம்பர் மாதத்தின் நான்காவது உச்சம் ஆகும்.
ஆக, செப்டம்பர் மாதத்தின் முதல் 10 நாள்களிலேயே தங்கம் விலை நான்கு புதிய உச்சங்களைச் சந்தித்துவிட்டது.
இதன் பின், செப்டம்பர் 16-ம் தேதி, தங்கம் மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டது. அன்று கிராமுக்கு ரூ.10,280 ஆகவும், பவுனுக்கு ரூ.82,240 ஆகவும் விற்பனை ஆனது.
செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது 10 நாள்கள், தங்கம் அவ்வளவாகப் பெரிய உச்சங்களைப் பார்க்கவில்லை. இந்த 10 நாள்களில் தங்கம் கொஞ்சம் இறக்கத்தைச் சந்தித்தது.
அதன் பின், செப்டம்பர் 22-ம் தேதி மதியம், தங்கம் கிராமுக்கு ரூ.10,430 ஆகவும், பவுனுக்கு ரூ.83,440 ஆகவும் விற்பனை ஆனது.

அடுத்த நாள் (செப்டம்பர் 23) காலை, தங்கம் விலை கிராமுக்கு ரூ.10,500 ஆகவும், பவுனுக்கு ரூ.84,000 ஆகவும் உயர்ந்தது. அன்று மதியமே தங்கம் கிராமுக்கு ரூ.10,640 ஆகவும், பவுனுக்கு ரூ.85,120 ஆகவும் விற்பனை ஆனது.
இந்த இரு நாள்களில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.280-உம், பவுனுக்கு ரூ.2,240-உம் உயர்ந்தது.
அதன் பின், நேற்று (செப்டம்பர் 29) மதியம், கிராமுக்கு ரூ.10,770 ஆகவும், பவுனுக்கு ரூ.86,160 ஆகவும் விற்பனை ஆனது.
இப்போது (செப்டம்பர் 30) தங்கம் கிராமுக்கு ரூ.10,860 ஆகவும், பவுனுக்கு ரூ.86,880 ஆகவும் விற்பனை ஆகி வருகிறது.
இந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் தங்கம் கிராமுக்கு ரூ.1,155-உம், பவுனுக்கு ரூ.9,240-உம் உயர்ந்துள்ளது.
வெள்ளி
இந்த மாதத்தின் தொடக்கத்தில் கிராமுக்கு ரூ.136-க்கு விற்பனையாகி வந்த வெள்ளி, இன்று ரூ.161-க்கு விற்பனையாகி வருகிறது.
இன்னும் உயருமா?
தற்போது நிலவி வரும் சர்வதேச நிலவரப்படி, தங்கம் விலை இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.
தங்கத்தைப் போலவே, வெள்ளி விலையும் அதிகரிக்கலாம்.

இந்த மாதத்தின் தங்கம் விலை உயர்விற்குக் காரணம் என்ன?
அமெரிக்காவின் டாலர் மதிப்பு பலவீனமாக இருந்தது… இருக்கிறது.
அமெரிக்க ஃபெடரல் வங்கி தனது வட்டியை 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்திருக்கும் பரஸ்பர வரிக்கு எதிராக அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.
உலக நாடுகளின் வங்கிகள் தொடர்ந்து தங்கங்களை வாங்கி குவித்து வருகிறது. இன்னொரு பக்கம், அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களை விற்கிறது.
சர்வதேச அளவில், தற்போது பல நிலையற்ற தன்மைகள் நிலவி வருகிறது.