
கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27), கரூரில் பரப்புரை மேற்கொண்டார் தவெக தலைவர் விஜய். அப்போது அங்கே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதில் சிக்கி பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை விசாரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர் கரூரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
ஜெ.பி.நட்டா அமைத்த குழு
இந்தச் சம்பவத்தை விசாரிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து 8 எம்.பிக்கள் குழு ஒன்றை ஜே.பி நட்டா அமைத்துள்ளார். இந்தக் குழுவின் தலைவராக ஹேமமாலினி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் குழுவில் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், அபராஜிதா சாரங்கி, ரேகா சர்மா, சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஷிண்டே, தெலுங்கு தேசக் கட்சியில் புட்டா மகேஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு தற்போது கோவை விமான நிலையத்திற்கு வந்துள்ளது.
இவர்களைப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றார்.

ஹேமமாலினி பேசியது என்ன?
கோவை விமான நிலையத்தில் ஹேமமாலினி, “நாங்கள் அனைவரும் கரூரில் என்ன நடந்தது, எதனால் இந்தச் சம்பவம் ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்ய வந்திருக்கிறோம்.
இந்தச் சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கவும் வந்திருக்கிறோம்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் சொல்லவும் செல்ல இருக்கிறோம்.
பின்னர், ஆய்வு செய்த தகவல்களை அறிக்கையாக சமர்ப்பிப்போம்” என்று பேசினார்.
“எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை. அனைவரையும் பார்த்து ஆய்வு செய்யும் வரை நாங்கள் இங்கு இருப்போம்” என்று அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.