
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகிலுள்ள ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாசன் மகன் அரவிந்தன் (வயது 32). இவரும், பக்கிரிதக்கா பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகள் நந்தினி என்பவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்துவந்திருக்கிறது.
நேற்று முன்தினம், அரவிந்தன் தன் மாமியார் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த மாமனாரிடம், `உங்கள் மகள் அடிக்கடி சண்டை போடுகிறாள். தற்கொலைக்கு முயல்கிறாள். நீங்கள் வந்து அவளுக்கு அறிவுரை கூறிவிட்டுப் போங்க..’ எனக்கூறி அழைத்திருக்கிறார்.
மகள் வாழ்க்கை மீதான அக்கறையில், ராஜாவும் அவரின் மனைவியும், மருமகன் அரவிந்தனுடன் காரில் புறப்பட்டுச் சென்றார். இவர்களுடன் ராஜாவின் உறவினர் மகளான 13 வயது சிறுமியும் சென்றுள்ளார். ஏலகிரி கிராமம் நோக்கிச் சென்றபோது, கார் திடீரென ஏரியில் பாய்ந்தது. இதில் இருந்து மீட்கப்பட்ட ராஜா, அவரின் மனைவி, அந்தச் சிறுமி ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
மருமகன் அரவிந்தன் கொடுத்த தகவலால் `விபத்து’ என்றே முதலில் எல்லோராலும் நம்பப்பட்டது.
ஆனால், போலீஸார் நடத்திய விசாரணையில், `அது விபத்து அல்ல. மாமனாரையும், மாமியாரையும் கொல்ல முயன்றதாக’ தெரியவந்திருக்கிறது. காரில் சென்றபோது, மாமனாருடன் அரவிந்தன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். மாமனார் ராஜாவும் பதிலுக்கு வாக்குவாதம் செய்ததால், கடும் ஆத்திரமடைந்த அரவிந்தன் காரை அதிவேகமாக ஓட்டி ஏரிக்குள் பாய்ந்து மூழ்கடித்ததாகத் தெரிய வந்திருக்கிறது. அப்போது, அரவிந்தன் மட்டும் கார் கதவைத் திறந்துகொண்டு மேலே வந்துவிட்டாராம்.

மாமனார், மாமியார், அவர்களுடன் சென்ற சிறுமி ஆகிய 3 பேரையும் மீட்காமல் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. தண்ணீருக்குள் மூழ்கிய காரில் இருந்து மாமனார் ராஜா போராடி கதவை திறந்துகொண்டு தன் மனைவியையும், அந்த சிறுமியையும் மீட்டு மேலே கொண்டுவந்திருக்கிறார். பிறகு, அந்தப் பகுதி வழியாக சென்றவர்கள் 3 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகத் தெரியவந்ததையடுத்து, தப்பி ஓடிய மருமகன் அரவிந்தனைத் தேடிப்பிடித்து போலீஸார் கைது செய்திருக்கின்றனர். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.