• September 30, 2025
  • NewsEditor
  • 0

புகழ்பெற்ற சரஸ்வதி ஆலயம்

கல்விக் கடவுள் சரஸ்வதி. அவளே கல்வி, கேள்வி மற்றும் கலைகளுக்கு அதிபதி. அவளை வழிபட்டால் மூடனும் ஞானி ஆவான். அப்படிப்பட்ட அந்த அற்புத தேவிக்கு என்று தமிழகத்திலிருக்கும் தனிக்கோயில் கூத்தனூரில் உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ள ஊர் பூந்தோட்டம். இந்த ஊரில்தான் புகழ்பெற்ற சரஸ்வதி ஆலயம் அமைந்துள்ளது.

முற்காலத்தில் காலத்தில் இத்தலம் அம்பாள்புரி என்றும் அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்த ஊரை இரண்டாம் ராஜராஜ சோழன் தன் அவைப் புலவர் ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கியதால் கூத்தனூர் என்று பெயர் பெற்றது என்கிறார்கள்.

சரஸ்வதி

வரகவி பாடும் திறம் பெற்ற ஒட்டக்கூத்தர்

புருஷோத்தம பாரதி என்பவருக்கு விஜயதசமியன்று அம்பிகையின் அருள் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக விஜயதசமி நாளில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை இந்தக் கோயிலுக்கு அழைத்து வந்து அட்சராபியாசம் செய்த பிறகே பள்ளியில் சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

பெரும் புலவரான ஒட்டக்கூத்தர் வரகவி பாடும் திறன் வேண்டி கலைமகளை வழிபட்ட தலம் இது. அவர் கூத்தனூருக்கு அருகில் பூந்தோட்டம் அமைத்து, காவிரி நீரால் சரஸ்வதி தேவிக்கு அபிஷேகம் செய்து பூஜித்து வந்தார்.

அவருடைய பூஜையில் மனம் மகிழ்ந்த சரஸ்வதி தேவி, ஒட்டக்கூத்தருக்குத் தன் வாய் தாம்பூலத்தை வழங்கியதாகவும், அதன் பலனாக ஒட்டக்கூத்தர் வரகவி பாடும் திறம் பெற்று, மூன்று சோழ மன்னர்களின் அரசவைப் புலவராக இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இங்கே சரஸ்வதி தேவி வெண்மை நிற ஆடை தரித்தவளாகக் காட்சி தருகிறாள். அவளின் ஆசனமான வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல்கையில் அட்சர மாலையும், இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கியிருக்கிறாள்.

ஜடாமுடியுடன் கருணைபொழியும் இருவிழிகளுடன் ‘ஞானச்சஸ்’ என்ற மூன்றாவது திருக்கண்ணும் கொண்டு கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். இக்கோயிலின் அருகில் புகழ் பெற்ற மாப்பிள்ளை சுவாமி’ கோயில் இருக்கிறது.

இந்த தலத்து சிவனை வழிபட்டால், திருமணத்தடையுள்ள ஆண், பெண்களுக்கு திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. மூலஸ்தானத்தில் கல்யாணப்பந்தலே இருப்பது குறிப்பிடத்தக்கது.

கூத்தனூர் சரஸ்வதி கோயில்
கூத்தனூர் சரஸ்வதி கோயில்

இங்கே சரஸ்வதி தேவி கன்னி சரஸ்வதியாக வீற்றிருந்து, தன்னை தரிசித்து வழிபடும் பக்தர்களுக்குக் கல்விச் செல்வத்தை அள்ளி வழங்கி அருள்புரிகிறாள் என்கிறது தலபுராணம்.

அழகிய ராஜகோபுரம் நம்மை வரவேற்கும். உள்ளே சென்றால் ஒற்றைப் பிராகாரம் காணப்படும். பிராகாரத்தில் விநாயகர், நாகர், பிரம்மா, பிரம்புரீஸ்வரர், பாலதண்டாயுதபாணி ஆகியோர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.

ஆலயத்தில் ஒட்டக்கூத்தருக்கும் சிலை இருக்கிறது. சரஸ்வதியின் முன்னால் அன்ன வாகனம் உள்ளது. இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் நர்த்தன விநாயகர் ‘சுயம்புமூர்த்தி’ என்கிறார்கள்.

சரஸ்வதி பூஜை

இந்த ஆலயத்தில் வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சாரதா நவராத்திரி விழா 12 நாள்களும், பின்னர் பத்து நாள்கள் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகின்றன. விழா நாள்களில் சரஸ்வதி தேவி சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு, புஷ்ப அலங்காரம் என்று பல்வேறு அலங்காரங்களில் காட்சி தருவதை தரிசிக்கக் கண் கோடி வேண்டும்.

சரஸ்வதி பூஜையன்று மட்டும் நியமத்துடன் விரதமிருந்து, பக்தர்களே அம்பிகையின் திருவடிகளில் மலர் கொண்டு அர்ச்சிக்கலாம் என்னும் வழக்கமும் உண்டு.

விஜயதசமி நாளில் இந்த ஆலயம் களைகட்டும். நூற்றுக்கணக்கான கார், வேன் முதலான வாகனங்கள் இங்கே வந்து பூஜை செய்த பிறகு கோயிலை வலம் வருவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.

கூத்தனூர் சரஸ்வதி
கூத்தனூர் சரஸ்வதி

நவராத்திரி நாள்களைத் தவிர, ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு அலங்காரம் நடைபெறுகின்றது. பௌர்ணமிதோறும் மாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

சரஸ்வதி தேவியின் அவதார நட்சத்திரமான மூலம் நட்சத்திரம் வரும் நாளிலும் விசேஷமாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. விசேஷ நாள்களிலும், சரஸ்வதிக்கு உரிய புதன்கிழமைகளிலும் அம்பிகைக்குத் தேனும் பாலும் அபிஷேகம் செய்தால் கல்வியில் மிகச் சிறந்த முறையில் தேர்ச்சி பெறலாம் என்பது ஐதிகம்.

வாழ்வில் ஒருமுறையேனும் உங்கள் பிள்ளைகளை கூத்தனூர் அழைத்துச் சென்று சரஸ்வதி தேவியை வழிபடச் செய்யுங்கள். வாழ்வில் அழிவில்லாத செல்வம் கல்வியே. அதை அருளும் அன்னையைத் தவறாமல் போற்றுவோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *