
துபாயில் நேற்று நடைபெற்ற (செப்டம்பர் 28) ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக சாம்பியன் ஆனது.
லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றைப் போலவே இறுதிப்போட்டியிலும் பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கைகுலுக்கவில்லை.
அதற்கு மேலாக, ஆசிய கிரிக்கெட் தலைவரான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், அந்நாட்டு அமைச்சருமான மொஹ்சின் நக்வியின் கோப்பையை வாங்க மாட்டோம் எனப் புறக்கணித்துவிட்டனர்.
மொஹ்சின் நக்வியும் கோப்பையுடன் சென்றுவிட்டார். இன்னும் கோப்பை இந்திய அணியிடம் தரப்படவில்லை.
இவ்வாறிருக்க, போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் சூரியகுமார் யாதவிடம் அவரின் செயல்பாடுகள் தொடர்பாகக் கேள்வி ஒன்றைப் பத்திரிகையாளர் முன்வைத்தார்.
அதாவது, “கேள்வி என்னவென்றால் நீங்கள் நன்றாக விளையாடினீர்கள். இன்று சாம்பியன் ஆகிவிட்டீர்கள். ஆனால், இந்த முழுத் தொடரிலும் பாகிஸ்தான் அணியுடன் உங்கள் நடத்தை சரியில்லை.
நீங்கள் கைகுலுக்கவில்லை. பின்னர் அரசியல் பத்திரிகையாளர் சந்திப்பை நீங்கள் நடத்தினீர்கள்.
முழு கிரிக்கெட் வரலாற்றிலும், விளையாட்டில் அரசியலைக் கொண்டுவந்த முதல் கேப்டன் நீங்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று பத்திரிகையாளர் கேள்வியெழுப்பினார்.

அப்போது, “நான் பேசலாமா வேண்டாமா… நீங்கள் கோபப்படுகிறீர்கள். உங்கள் கேள்வி எனக்குப் புரியவில்லை. நான்கு கேள்விகளை ஒன்றாகக் கேட்கிறீர்கள்” என்று கேள்விக்கான பதிலை மழுப்பினார் சூர்யகுமார் யாதவ்.
அதைத்தொடர்ந்து, மொஹ்சின் நக்வி கோப்பையைக் கொண்டுசென்றதை விமர்சித்த சூர்யகுமார் யாதவ், “நான் கிரிக்கெட் பார்க்கத் தொடங்கியதிலிருந்து, விளையாடத் தொடங்கியதிலிருந்து இதுபோன்ற ஒரு நிகழ்வைப் பார்த்ததில்லை.
சாம்பியன் அணிக்கு கோப்பை மறுக்கப்பட்டது. அதுவும் போராடி வென்றது. நாங்கள் அதற்குத் தகுதியானவர்கள் என்று நான் நினைக்கிறேன். இதற்குமேல் என்னால் வேறு எதுவும் சொல்ல முடியாது” என்றார்.
இறுதிப்போட்டி முடிவில் நடந்த இச்சம்பவம் குறித்த உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடவும்.