
நேற்று அமெரிக்க வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் – நெதன்யாகு சந்திப்பு நடந்தது.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை நெருங்கும் இஸ்ரேல் – காசா போர் நிறுத்தத்திற்கு ஒப்புகொண்டுள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. இதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 20 பரிந்துரைகளை ஒப்புகொண்டுள்ளார் அவர்.
தனிப்பட்ட சந்திப்பிற்கு பிறகு, இருவரும் ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது ட்ரம்ப் பேசியதாவது:
“ஆயிரம் ஆண்டுகளில் முதன்முறையாக, நீங்கள் வரலாற்றைப் பார்த்தாலும், நீங்கள் படித்திருந்தாலும், நீங்களும் ஆயிரம் ஆண்டுகளில் முதல்முறையாக என்று கூறுவீர்கள்.
ஹமாஸின் அச்சுறுத்தலை நீக்குவதற்கான இஸ்ரேலின் பணிக்கு எப்போதுமே என்னுடைய முழு ஆதரவு உண்டு. ஆனால், இப்போது அமைதி ஒப்பந்தம் ஏற்படும் என்று நினைக்கிறேன்.
ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை மறுத்தால், அதற்கு நிறைய சாத்தியங்கள் உள்ளன. அவர்கள் மட்டும்தான் இந்த ஒப்பந்தத்தை இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. மற்ற அனைவருமே ஒப்புக்கொண்டு விட்டார்கள்.
ஹமாஸிடம் இருந்து பாசிட்டிவாக பதில் வரும் என்று நான் நம்புகிறேன். ஒருவேளை அப்படி வரவில்லை என்றால், நெதன்யாகு என்ன செய்தாலும், அதற்கு என்னுடைய முழு ஆதரவு உண்டு.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு சவுதி அரேபியா, கத்தார், துருக்கி, ஜோர்டான், இந்தோனேசியா, எகிப்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உதவின” என்று கூறினார்.
நெதன்யாகு பேசும்போது,
“அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு நன்றி. வெள்ளை மாளிகையில் இதுவரை இருந்தவர்களிலேயே இஸ்ரேலுக்கு சிறந்த நண்பர் ட்ரம்ப் தான்.

அவருக்கு பக்கத்தில் யாருமே வர முடியாது. அடுத்த 72 மணி நேரத்தில், உயிரோடு உள்ள மற்றும் இறந்த பணயக் கைதிகளை ஹமாஸ் ஒப்படைக்க வேண்டும்.
இதை அமைதியாக முடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை ஹமாஸ் மறுத்தாலோ, ஒப்புக்கொண்டுவிட்டு பின்பற்றவில்லை என்றாலோ, நாங்கள் அவர்களது பணியை முடிப்போம்.
அது எளிதாக இருந்தாலும், கடினமாக இருந்தாலும், அதை செய்து முடிப்போம்” என்று பேசியுள்ளார்.