
Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பார்கள். ஆரோக்கியமான நபர் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது?
-ராஜா, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி
இது சர்க்கரைநோய் குறித்த புரிந்துணர்வு இல்லாமல் கேட்கப்பட்ட கேள்வியாகத் தெரிகிறது.
எந்தப் பிரச்னையும் இல்லாத, ஆரோக்கியமான ஒரு நபர், சராசரியாக ஒரு நாளைக்கு 6 முதல் 7 முறை சிறுநீர் கழிப்பது இயல்பு.
அதுவும் அந்த நபர், ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கக்கூடிய நபராக இருந்தால் இது இயல்பாக நடக்கும்.
நீரிழிவு பாதித்த ஒரு நபர், அதிக அளவிலும் அடிக்கடியும் சிறுநீர் கழிப்பது ஏன் என்பதை கவனிக்க வேண்டும். அவர் சாதாரண நபரைவிடவும் அதிக முறை சிறுநீர் கழிக்க வாய்ப்பு உண்டு. அதற்கு ‘கிளைக்கோசூர்யா’ (Glycosuria) என்று பெயர்.
உடலில் குளுக்கோஸ் அளவு அதிகமாகும்போது, அந்த குளுக்கோஸானது, செல்களுக்குள் உள்ள நீரை எல்லாம் வெளியே எடுத்து, அதிக அளவில் சிறுநீரை உருவாக்குவதால்தான், சர்க்கரைநோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கிறது.
கிளைக்கோசூர்யா என்ற நிலை, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் ‘பாலியூரியா’ (Polyuria) என்ற நிலையை உருவாக்கும். நீரிழிவு பாதித்த ஒருவர், தன் ரத்தச் சர்க்கரை அளவை எந்த அளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்பது இதில் முக்கியம்.
ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்பட்சத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை இருக்காது.
அப்படி கட்டுப்பாட்டில் இல்லாமல் போகும்போது, சராசரியாக ஒரு நாளைக்கு 6 முறை சிறுநீர் கழிக்கும் நிலையானது, 12 முறையாக மாறலாம். இரவிலும் பலமுறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கலாம்.

உயர் ரத்த அழுத்தத்துக்காக மருந்துகள் எடுத்துக்கொள்வோருக்கும், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அதேபோல சிறுநீர்ப் பையில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலும், அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர் வெளியேறலாம்.
ஆண்களைப் பொறுத்தவரை புராஸ்டேட் பாதிப்பு இருந்தாலும் சிறுநீர் அடிக்கடி வெளியேறலாம். எனவே, அடிக்கடி சிறுநீர் வெளியேற்றுபவர்கள், அதற்கான காரணத்தை மருத்துவரை அணுகித் தெரிந்துகொண்டு, சரியான சிகிச்சையைப் பின்பற்றுவதே சரி.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.