சபரிமலை தங்க கவசங்கள்
சபரிமலை கோயில் கருவறை முன் உள்ள துவார பாலகர்களின் தங்க பீடங்கள் காணாமல்போன நிலையில் உபயதாரரான உண்ணிகிருஷ்ணன் போற்றியின் சகோதரி வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
துவார பாலகர்களின் மீது பொருத்தப்பட்டிருந்த தங்க கவசங்கள் கடந்த 7-ம் தேதி அகற்றப்பட்டு பராமரிப்பு பணிகளுக்காக சென்னை கொண்டுசெல்லப்பட்டது.
கோர்ட்டுக்கும், கோர்ட் நியமித்த அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்காமல் தங்க கவசங்கள் எடுத்துச்செல்லப்பட்டதாக கோர்ட் விமர்சித்ததை அடுத்து, கவசங்கள் மீண்டும் சபரிமலைக்கு கொண்டுவரப்பட்டன.
அதைதொடர்ந்து தங்க கவசங்களின் கீழ்ப்பகுதியில் உள்ள பீடங்கள் மற்றொரு செட் தேவசம்போர்டு லாக்கரில் இருப்பதாக உபயதாரரான உண்ணிகிருஷ்ணன் போற்றி கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து தேவசம் விஜிலென்ஸ் நடத்திய விசாரணையில் லாக்கர் ரூமில் பீடங்கள் இல்லை என தெரியவந்தது. மேலும், புகார் கிளப்பிய உண்ணிகிருஷ்ணன் போற்றியின் சகோதரி வீட்டில் இருந்து அவை மீட்கப்பட்டன.
கேரள உயர்நீதிமன்ற உத்தரவு
தங்க பீடம் குறித்து விசாரணை நடத்திய தேவசம் விஜிலென்ஸ் எஸ்.பி கேரள உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதில் தங்க பீடங்கள் மட்டு அல்ல, சபரிமலை கோயிலில் உள்ள தங்கம் குறித்து கணக்கு இல்லை என தேவசம் விஜிலென்ஸ் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
திருவாபரணம் பதிவேட்டில்தான் தங்கம் குறித்து குறித்துப் பதிவுசெய்ய வேண்டும். ஆனால், துவார பாலகர்கள் சிலைகளுக்கு மற்றொரு பீடம் இருக்கும் தகவல் திருவாபரணம் பதிவேட்டில் குறிப்பிடப்படவில்லை.

லாக்கர் அறையில் தங்க நகைகள் ஒரு பெட்டியிலும், தங்க நாணயங்கள் ஒரு சாக்குப்பையிலும் வைக்கப்பட்டுள்ளன. அந்த நகைகள் குறித்த தகவல்களும் பதிவேட்டில் குறிப்பிடப்படவில்லை.
சபரிமலை கோயிலுக்குச் சொந்தமான பொருள்கள் குறித்த புள்ளிவிபரங்களோ, தகவல்களோ அந்தப் பதிவேட்டில் இல்லை என விஜிலென்ஸ் அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
விஜிலென்ஸ் அதிகாரியின் அறிக்கையை ஆய்வுசெய்த ஐகோர்ட் தேவசம் பெஞ்ச், தங்க பீடம் விவகாரத்தில் உண்ணிகிருஷ்ணன் போற்றி மட்டும் அல்லாமல் அதிகாரிகளின் பங்கு குறித்தும் விரிவான விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டது.
தங்கக் கவசம் திரும்பக் கொண்டுவந்தபிறகு அதன் எடையைச் சரிபார்க்கக்கூட அதிகாரிகள் முயலவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளது கோர்ட். மேலும், சபரிமலை கோயிலின் தங்கத்தை மதிப்பிடுவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்கவும் ஐகோர்ட் முடிவு செய்துள்ளது.