
தென்னிந்திய சினிமாவில் 1950- மற்றும் 1960-களில் நன்றாக அறியப்பட்ட இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தவர் வி.எஸ்.ராகவன். (நடிகர் வி.எஸ்.ராகவன் அல்ல). ஏவி.எம் ஸ்டூடியோவில் சவுண்ட் இன்ஜினீயராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சிவாஜி கணேசன், பானுமதி நடித்த ‘கள்வனின் காதலி’ (1955), சாரங்கதாரா (1958), டி.ஆர்.மகாலிங்கம், பானுமதி நடித்த ‘மணிமேகலை’(1959) ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். தனது ரேவதி புரொடக்‌ஷன்ஸ் மூலம் ‘மனிதனும் மிருகமும்’ (1953), ‘மேதாவிகள்’ (1955) ஆகிய படங்களையும் தயாரித்திருக்கிறார். இவர் தமிழ், மலையாளத்தில் இயக்கிய படம், ‘சந்திரா’.
தொழிலதிபரான ஜனார்த்தனனின் மகள் சந்திரிகா, அவர்கள் வீட்டுச் சமையல்காரப் பெண்ணின் மகன் கோபியை காதலிக்கிறார். அந்த காதல் சரியாக வராது என நினைத்து விலகுகிறான் கோபி. ஜனார்த்தனனுக்கு தன் மகளின் காதல் கதை தெரிகிறது. கோபியைத் தனது நிறுவனத்தில் இருந்தும் அவர் அம்மாவை வீட்டில் இருந்தும் விரட்டுகிறார். தனது மருமகனுக்குச் சந்திரிகாவைத் திருமணம் செய்து கொடுக்கத் திட்டமிடுகிறார். இதற்கிடையே தன்னை உங்களுடன் அழைத்துச் செல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கோபியை மிரட்டுகிறார் சந்திரிகா. பிறகு என்ன நடக்கிறது என்று கதை செல்லும்.