• September 29, 2025
  • NewsEditor
  • 0

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையிலான வடமாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேயிலை தோட்டங்களைப் பொறுத்தவரை பெரும்பாலான வடமாநில தொழிலாளர்கள் தோட்ட குடியிருப்புகளில் குடும்பமாக தங்கி அங்கேயே பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேயிலை தோட்டத்தில் வடமாநில பெண் சடலம்

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் , தன்னுடைய மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் கோத்தகிரி, அரவேணு பகுதியில் உள்ள ‘நில்கிரி கிளன்பர்ன்’ என்கிற தனியார் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். 3 மாதங்களாக அதே நிறுவனத்தின் தேயிலை தொழிற்சாலையில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் அவரின் மனைவி திடீரென மாயமாகியிருக்கிறார். அக்கம்பக்கத்தில் தேடப்பட்டு வந்த நிலையில், அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

தொழிலாளி மனைவியின் மர்ம மரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தெரிவித்த கோத்தகிரி காவல்துறையினர், ” சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதான இந்த பெண் கணவர் மற்றும் 3 குழந்தைகளை பராமரித்து வந்திருக்கிறார். வீட்டிலிருந்து நேற்று முன்தினம் இரவு திடீரென மாயமான இவர், தலையில் காயங்களுடன் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

தேயிலை தோட்டத்தில் வடமாநில பெண் சடலம்

பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வடமாநில பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். முதல்கட்டமாக சந்தேக மரணப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது‌. உடற்கூறாய்வு முடிவுகளின் அடிப்படையிலேயே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

வடமாநில பெண் ஒருவர் தனியார் தேயிலைத் தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *