கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அசம்பாவிதம் நடந்ததற்கு சதிச் செயல் காரணமா என்ற விவாதம் சமூக ஊடகங்களில் நடக்கிறது.
இந்த விவகாரத்தை தொடக்கத்திலிருந்து பின்பற்றுபவன் என்ற வகையிலும், விகடன் பத்திரிகையாளர் புண்ணியமூர்த்தி களத்திலிருந்து கொடுத்த Ground Report அடிப்படையிலும், பல்வேறு சந்தேகங்களுக்கு விடை தேடுவதே இந்த கட்டுரை.
#KarurStampede என்ன நடந்தது? யார் பொறுப்பு?
1. விஜய் தாமதமாக வந்தது – கரூரில் 12 மணிக்கு விஜய் பேசியிருக்க வேண்டும். ஆனால் விஜய் சென்னையில் இருந்து தாமதமாக கிளம்பி கரூரில் இரவு 7.30 மணிக்கு பேசுகிறார். கரூரில் ஜவுளி நிறுவனங்களில் சனிக்கிழமை சம்பள நாள். வேலை முடிந்து வந்தவர்கள், பள்ளி சிறப்பு வகுப்பு முடிந்து வந்த மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என பலதரப்பினர் மாலை கூட்டத்துக்கு வந்திருக்கின்றனர். 12 மணிக்கு அல்லது அதிகபட்சம் 3-4 மணிக்குள் விஜய் பேசியிருந்தால் கூட்டத்தில் கணிசமான அளவு இருந்திருக்காது. விஜய்யின் வருகை பிரச்னையின் தொடக்கமாக வருகிறது.
2. விஜய் வருகைக்காக 3 மணியிலிருந்து ரசிகர்கள் வரத் தொடங்குகின்றனர். 5 மணியளவில் வேலுசாமிபுரம் சாலை நிரம்பி வழிகிறது. மதியத்திலிருந்து காத்திருந்தவர்கள், சோர்வாகத் தொடங்கினர். வெளியேற நினைத்த பெண்களால் வெளியேற முடியவில்லை. விஜய் வருகிறார் என புதிய கூட்டம் உள்ளே வரத் தொடங்கியது. விஜய் நெடுஞ்சாலையில் இருந்து வேலுசாமிபுரம் பயிண்ட்டுக்கு வர 2 மணி நேரம் ஆகிறது. 7 மணியளவில் தண்ணீர் இன்றி மக்கள் மயக்கம் போடத் தொடங்குகின்றனர்.
அந்த நேரத்தில் விஜய்யின் வேன் உள்ளே வருகிறது. வேனுக்கு வழிவிட கூட்டம் பின்னே செல்கிறது. ஆனால் பின்னால் செல்ல இடமில்லை. அப்போதுதான் அசம்பாவிதம் ஏற்படுகிறது. இரு பக்கங்களிலும் பேனர் வைத்திருந்ததால் அதுவும் இடத்தை அடைத்துவிடுகிறது. அப்போதே நெரிசலில் மிதிபடத் தொடங்கிவிட்டனர். இதெல்லாம் நடக்கும்போது விஜய் வேனைவிட்டு வெளியே வரவே இல்லை. அவர் வெளியில் வராததும் கூட்டத்தில் ஆர்வமிகுதியைக் கூட்டுகிறது.
3. விஜய் வந்துபேசுவதற்கு முன்பே ஆம்புலன்ஸ்கள் அலர்ட் செய்யப்பட்டுவிட்டன. அவர் பேச ஆரம்பித்தவுடன் 2 ஆம்புலன்ஸ்கள் வந்தன. அதில் ஒன்று தவெக ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ். தவெக கொடியும் அதில் இருந்தது. அந்த ஆம்புலன்ஸ் தவெகவினருக்கு தெரியாமல் வந்திருக்க வாய்ப்பில்லை. விஜய் பேசத் தொடங்குவதற்கு முன்பே அங்கே அசம்பாவிதம் நடந்திருக்கிறது என தவெக நிர்வாகிகளுக்கு நிச்சயம் தெரிய வந்திருக்கும்.
4. விஜய் பேசும்போது தண்ணீர் கேட்பவர்களுக்கு, பாட்டிலை எடுத்து வீசுவார். மறுபுறம் தண்ணீர் கேட்டவர்கள் பக்கமிருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அதைப் பார்த்தால் அங்கு ஏற்கெனவே சிலர் கீழே மயங்கி விழுந்திருப்பது தெரிகிறது. இருட்டாக இருந்ததாலும், கூட்டம் மறைத்திருந்ததாலும் அது விஜய்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விஜய் தொடர்ந்து பேசுகிறார்.
People started collapsing even while TVK Chief Vijay was speaking. If you had seen the event yesterday, Vijay did give water bottles to people seeing them fainting when he started his speech.
If I am not wrong, Vijay while speaking also noted that the ambulances have TVK flags… https://t.co/hw5voyOQqX pic.twitter.com/MKQ08CSe7J
— Arvind Gunasekar (@arvindgunasekar) September 28, 2025
5. அங்கு நிலைமை சரியில்லை என்பது ஒரு கட்டத்தில் விஜய்க்கு தெரிகிறது. ஆதவ் அர்ஜுனிடம் தொடர்ந்து பேசலாமா என விஜய் கேட்கிறார். டாக்டர் பிரபுவை வரச் சொல்கிறார் விஜய். சிறிது நேரத்தில் பேச்சு அவசர அவசரமாக முடிகிறது.
6. பவர்கட் ஆனதா? – களத்தில் விகடன் பத்திரிகையாளர் புண்ணியமூர்த்தி நேரடி சாட்சிகளிடம் நடந்ததை கேட்டு பதிவு செய்திருக்கிறார். அதில், அப்பகுதியில் குடியிருப்போர், பவர் கட் ஆகவில்லை என்கின்றனர்.
பிறகு இருட்டாக இருந்தது ஏன்?
தவெக தரப்பில் மின்விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன. அதற்கு மின்சாரம் ஜெனரேட்டரிலிருந்து வந்தது. அந்த ஜெனரேட்டரை சுற்றி தகரம் வைத்து தடுப்பு ஏற்படுத்தியிருந்தார்கள். தள்ளு முள்ளு ஏற்பட்டதில், தகரத்தை தகர்த்து ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருந்த இடத்துக்குள் பலர் சென்றனர். அப்போதுதான், ஜெனரேட்டரிலிருந்து வந்த மின்சாரம் கட் ஆகிறது. நெரிசலோடு சேர்ந்து, மின் தடையும் ஏற்பட்டதால், இருட்டில் பதற்றம் அதிகரித்து பலர் மிதிபட்டிருக்கின்றனர். யார் சிக்கியிருக்கிறார்கள் என்பது கூட தெரியாத அளவுக்கு ஏறி மிதித்துச் சென்றிருக்கிறார்கள்.

விஜய் வருவதற்கு முன்பு மரத்தில் சிலர் ஏறினார்கள் என்பதால் சிறிது நேரம் பவர் கட் செய்தோம் என்கிறார் மின்வாரிய தலைமை பொறியாளர். அவர்களை இறங்கச் செய்த பிறகு, மின் இணைப்பை கொடுத்தோம் என்றும் அவர் சொல்கிறார். அப்படியே பவர் கட் செய்திருந்தாலும், அதில் திட்டமிட்ட சதியில்லை. ஏனெனில், தவெக மாவட்டச் செயலாளர், விஜய் வரும்போது பாதுகாப்பு கருதி பவர் கட் செய்ய வேண்டும் என 26-ம் தேதி மனு கொடுத்துள்ளார். ஆனால் அதை கரூர் மின்வாரியம் நிராகரித்திருக்கிறது.
பவர் கட்
7. இடம்: தவெக கேட்ட லைட்ஹவுஸ் ரவுண்டானா சாலை, வேலுசாமிபுரத்தைவிட பெரிய சாலை இல்லை. கிட்டத்தட்ட ஒரே அளவுதான். ஆனால், லைட்ஹவுஸ் பகுதியில் 5 சாலைகள் பிரிகின்றன. வேலுசாமிபுரத்தில் ஒரே சாலை, சில குட்டி சந்துகள் மட்டுமே உள்ளன. அந்த சந்துகளிலும் பைக்குகளை நிறுத்தியிருந்ததால் இடைஞ்சலாக இருந்திருக்கிறது. வெளியேற முயன்றவர்கள் மீது பைக் சாய்ந்ததில் பலர் காயமடைந்திருக்கின்றனர்.
இதையெல்லாம் வைத்துப் பார்த்தால், ரவுண்டானாவில் இடம் கொடுத்திருந்தால், மக்கள் வெளியேற வழி இருந்திருக்கும். இதையும் கள ஆய்வில் உறுதிபடுத்தியிருக்கிறார் பத்திரிகையாளர் புண்ணிய மூர்த்தி.
ஆனால், ஏடிஜிபி தேவாசிர்வாதம், ரவுண்டானா பகுதியில் பெட்ரோல் பங்க், அமராவதி ஆற்றுப் பாலம் இருப்பதால் ரிஸ்க் ஏரியா என்பதால்தான் அனுமதி கொடுக்கவில்லை என்கிறார். அவர் சொல்வதில் ஒரு அடிப்படை காரணம் இருந்தாலும், வேலுசாமிபுரத்திலும் டிரான்ஸ்பார்மர் இருக்கிறது, சாலையில் மக்கள் வெளியேற கிளை சாலைகள் இல்லை. அதை ஏன் போலீஸ் ரிஸ்க்காக கருதவில்லை?
பாதுகாப்பு குறைபாடு
இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியின் கூட்டம் வேலுசாமிபுரத்தில் சுமுகமாக முடிந்ததாக ஏடிஜிபி சொல்கிறார். உண்மைதான். ஆனால் அந்த கூட்டம் வேறு, விஜய்க்கு வந்த கூட்டம் வேறு. அதை மனதில் வைத்துதானே ரிஸ்க்கை கணித்திருக்க வேண்டும்? இடத் தேர்வு குறித்து போலீஸ் இன்னும் தெளிவான விளக்கத்தை கொடுக்க வேண்டும்.
8. பாதுகாப்பு குறைபாடு – போலீஸே இல்லை என்கிறார்கள் அங்கிருந்த மக்கள். 500 பேரை காவல் பணியில் ஈடுபடுத்தினோம் என்கிறார், ஏடிஜிபி. விஜய்யும் போலீஸுக்கு நன்றி சொல்லியே பேச்சை தொடங்குகிறார். போலீஸில் ஒரு சிலர் சொல்லும் கருத்தையும் கவனிக்க வேண்டும். கூட்டத்துக்குள் 500 போலீஸை நிறுத்தினால், அதுவே பெரிய கூட்டமாக இருக்கும். இன்னும் சிக்கல் அதிகமாகியிருக்கும்.
அப்படியே போலீஸ் இருந்திருந்தாலும், இந்த கட்டுக்கடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்தியிருக்க முடியாது. கட்டுப்படுத்த முயற்சித்திருந்தால், அது வன்முறையாகவும் மாறி, இன்னும் பெரிய சிக்கல் ஆகியிருக்கும் வாய்ப்பும் இருக்கிறது.
9. போலீஸ் பாரபட்சமாக செயல்படுவதாகவும், தவெகவுக்கு மட்டும் அதிக கட்டுப்பாடுகள் விதிப்பதாகவும் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். அதில் உண்மை இருக்கலாம். ஆனால், களத்தில் என்ன நடக்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
விஜய் நாமக்கல்லிலிருந்து வரும்போது, அவரது வேனை விரட்டி வந்த பல இளைஞர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். பலர் டிரான்ஸ்பார்மரில், மின் கம்பத்தில் ஆபத்தான வகையில் ஏறுகின்றனர். இதையெல்லாம், கட்டுப்படுத்த எவ்வளவுதான் போலீஸ் பாதுகாப்பு கொடுத்தாலும், கட்சியின் பங்களிப்பும் தேவை.
வன்முறையாளர்கள் யார்?
Mob Mentality என வரும்போது எந்த கட்சியினராக இருந்தாலும் துள்ளத்தான் செய்வார்கள். போலீஸை வைத்து மட்டும் அதை அடக்கிவிட முடியாது. தன் தலைவனை பாதுகாப்பதில் முதலில் கட்சித் தொண்டன், பிறகுதான் போலீஸ் என்றே அனைத்து கட்சிகளும் இயங்கும். ஆனால் தவெகவில் மட்டும் தொடக்கத்திலிருந்தே, கட்சியினர் அந்த ரோலை சரியாக செய்யவில்லை. கட்சியினரின் இடத்தை பவுன்சர்கள் எடுத்துக் கொண்டனர்.
போலீஸ் சொல்வதை கேட்காதவர்கள் கூட கட்சி நிர்வாகிகளோ, விஜய்யோ சொன்னால் கேட்பார்கள். அப்படி சொல்லியும் கேட்கவில்லை என்றால், கட்சி கட்டுபாட்டோடு இல்லை என்று அர்த்தம். கட்சித் தலைமைக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே இருக்கும் இடைவெளியும், இந்த கடுப்பாடற்ற தன்மைக்கு ஒரு காரணம்.
10. உதவிக்கு சென்ற ஆம்புலன்ஸ்களையும் தடுத்து தவெகவினர் அடித்து நொறுக்கியிருக்கின்றனர். அப்படிச் செய்தவர்களை போலீஸார் தடுத்து அடித்து விரட்டியிருக்கிறார்கள். இங்கு வன்முறையாளர்கள் யார்?
செருப்பு வீச்சு
11. செருப்பு வீச்சு நடந்திருக்கிறது. உண்மைதான். ஆனால் கல்வீச்சு, கும்பல் புகுந்ததாக எந்த வலுவான ஆதாரமும் கிடைக்கவில்லை. மாவட்ட செய்தியாளர்களுக்கும் அப்படியொரு ஆதாரம் கிடைக்கவில்லை. இவ்வளவு பேர் இருக்கும் கூட்டத்தில், யாராவது சதி செய்ய நினைத்தால் நிச்சயம் ஒரு வீடியோவிலாவது அது பதிவாகியிருக்கும். இப்போதுவரை ஒரு வீடியோவும் அப்படி வெளியாகவில்லை.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், கரூரில் நடந்த சம்பவத்துக்கு விஜய், தவெக, போலீஸ், அரசு என அனைத்து தரப்பினர் செயல்பாட்டிலும் குறைபாடு இருப்பது தெளிவாகிறது. இதற்கு பொறுப்பேற்று சரியான விளக்கத்தை கொடுக்க வேண்டிய பொறுப்பு விஜய்க்கும், போலீஸுக்கும், அரசுக்கும் நிச்சயம் இருக்கிறது. பொறுப்பை உணர்ந்து அவர்கள் பதிலளிக்க வேண்டும்.