• September 29, 2025
  • NewsEditor
  • 0

கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பரப்புரை

தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை தரப்பில், சம்பவத்தன்று பதிவு செய்யப்பட்டிருக்கும் எஃப்.ஐ.ஆர் வெளியாகியிருக்கிறது.

அதில், “தமிழக வெற்றிக்கழகம் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், அவரது கட்சியின் தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

அதன் அடிப்படையில், கரூர் வேலுச்சாமிபுரத்தில் 27.09.2025 ம் தேதி 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

27.09.2025 அன்று காவல்துறைத் தலைவர் மத்திய மண்டலம் மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் சுமார் 500 காவலர்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தைச் சீர்செய்யும் பணிக்கு நியமிக்கப்பட்டனர்.

தவெக தொண்டர்கள் கூட்டம்

கூட்டம் அதிகளவில் கூடியது

கரூர் நகர மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் காலை 09.00 மணிக்கு பல்வேறு தொலைக்காட்சிகளில் தவெக தலைவர் விஜய் மதியம் 12.00 மணிக்கு கரூர் வர இருப்பதாகக் கூறப்பட்டது.

அதனால், காலை 10.00 மணியிலிருந்தே பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் பெருமளவில் வரத் தொடங்கினர்.

வேலுச்சாமிபுரம் மெயின்ரோடு, கோவை சாலை, முனியப்பன் கோவில் ஜங்ஷன், கோவை சாலை, திருக்காம்புலியூர் ரவுண்டானா, மதுரை சேலம் பைபாஸ் ரோடு ஆகிய இடங்களில் கூட்டம் அதிகளவில் கூடியது.

கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் கொடுத்த விண்ணப்பத்தில் 10,000 தொண்டர்கள்தான் வருவார்கள் என்று எழுதிக் கொடுத்துள்ளார்.

ஆனால் பிரச்சாரக் கூட்டத்திற்கு சுமார் 25,000-க்கும் மேற்பட்டோர் வந்தனர். இந்த நிலையில் மாலை 04.45 மணி சுமாருக்கு தவெக தலைவர் விஜய் கரூர் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையம், தவிட்டுப்பாளையம் வழியாக நுழைந்தார்.

வேண்டுமென்றே காலதாமதம் செய்து, தெருவில் அனுமதி இல்லாமல் பல்வேறு இடங்களில் ரோட்ஷோ நடத்தி போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தினார்.

விஜய்யின் கரூர் பிரசார நெரிசல்
விஜய்யின் கரூர் பிரசார நெரிசல்

அதிக இடங்களில் நிபந்தனைகளை மீறி வரவேற்புகள் நடத்தியும் காலதாமதம் செய்து மாலை 06.00 மணிக்கு `முனியப்பன் கோவில் சந்திப்பில்’ தவறான பாதையில் அதாவது சாலையின் வலது புறம் சென்று மாலை 07.00 மணிக்கு வேலுச்சாமிபுரம் ஜங்சனில் தொண்டர்களின் கூட்டத்திற்கு நடுவே வாகனத்தை நிறுத்தினார்.

வேண்டுமென்றே சிறிது நேரம் காலதாமதம் செய்ததால் அதே இடத்தில் அளவுக்கு அதிகமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

அந்த இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், ‘கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம் அலைமோதுகிறது. அதனால் மக்களிடையே அசாதாரண சூழல்கள் ஏற்படும்’ என்று தவெக கட்சியின் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் CTR நிர்மல் குமார் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் பலரிடமும் காவல்துறை பலமுறை எச்சரித்து அறிவுரை வழங்கியது.

நாங்கள் சொன்னதைக் கேளாமல் தொடர்ந்து அசாதாரணச் செயல்களில் ஈடுபட்டனர்.

காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்கியும், தவெக தொண்டர்களை மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் எவரும் சரிவர ஒழுங்குபடுத்தவில்லை.

விஜய்யின் கரூர் பிரசார நெரிசல்
விஜய்யின் கரூர் பிரசார நெரிசல்

ரோட்டில் அருகிலுள்ள கடைகளுக்கு நிழல் தரவேண்டி அமைக்கப்பட்டிருந்த குறுகிய சரிவான தகரக் கொட்டகைகளிலும், அருகிலிருந்த மரங்களிலும் கட்சித் தொண்டர்கள் ஏறி உட்கார்ந்தனர்.

அதனால், தகரக் கொட்டகை உடைந்தது, மரம் முறிந்தது. அதில் உட்கார்ந்திருந்த தொண்டர்கள் கீழே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சரிந்து விழுந்தனர்.

இதனால் பொதுமக்களில் பெரும்பாலோருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.

நான்கு மணிநேரம் தாமதம்

தவெக-வின் கரூர் ஏற்பாட்டாளர்களுக்கு விஜய் பொதுக்கூட்டத்திற்கு மாலை 03.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை அனுமதி வழங்கப்பட்டிருந்தும், குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற கட்டாய நிபந்தனையும் இருந்தது.

ஆனால், அதிக மக்கள் கூட்டத்தை வெளிப்படுத்தி அரசியல் பலத்தைப் பறைசாற்றும் நோக்கத்துடன் கட்சி ஏற்பாட்டாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் கரூருக்கு வருவதை நான்கு மணிநேரம் தாமதப்படுத்தினர்.

அந்த நீண்ட தாமதத்தின் காரணமாக அங்கு பல மணி நேரங்களாகக் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள், வெயிலிலும் தாகத்திலும் சோர்வடைந்தனர்.

ஆனந்த்
ஆனந்த்

நீண்ட நேரக் காத்திருப்பு, போதுமான தண்ணீர் மற்றும் மருத்துவ வசதி இல்லாமல், அதிகக் கூட்டம் காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் மக்கள் சோர்வடைந்தனர்.

இதன் விளைவாக, மேற்படி சம்பவத்தில் அதிகளவில் மிதிபடுதல் ஏற்பட்டு, அதனால் 11 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

மேலும் பலருக்குக் காயங்கள் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல் நிலைய குற்ற எண். 21.45 855/25 U/s 105,110,125(b), 223 BNS Act & 3 of TNPPDL Act 1 27.09.2025 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது,” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *